“மழை வரும் பின்னே.. மரங்கள் நடுவோம் முன்னே..”சென்னையைக் குளிரவைக்கப்போகும் 16.444 மரக்கன்று
சென்னை: 'மரம்தான் மழைக்கு ஆதாரம்'. இந்த வாசகத்தை யார் உணர்ந்தார்களோ இல்லையோ, நமது பெருநகர சென்னை மாநகராட்சி சரியாக உணர்ந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ள பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், சென்னையைச் சுற்றியுள்ள இயற்கை வளத்தையும் காப்பாற்றும் நடவடிக்கைகளில் தற்போது சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது.

அதற்கான முன்னோட்டமாகச் சென்னை மாநகராட்சியின் அதிகாரிகள் நல்ல நிழல் தரும் மரக் கன்றுகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவந்து சென்னையைச் சுற்றியுள்ள பூங்காக்களில் நட்டுவருகின்றனர்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியிலிருந்து 8 அடி முதல் 10 அடி வரை உயரமுள்ள வேம்பு, கடம்பு, பூவரசு, நாவல் போன்ற இரண்டு வயது உள்ள மரக்கன்றுகளைக் கொண்டுவந்து நட்டுவருகிறார்கள்.
இப்படி இதுவரை மாநகராட்சி சார்பில் 16.444 மரக்கன்று நடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாகச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் இறுதிவரை 12,304 மரக்கன்றுகள் நடப்பட்டிருந்தன. மீதம் உள்ள எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் இந்த மாதம் நடப்பட்டுள்ளன.

சென்னையைச் சிங்கார சென்னையாக மாற்ற முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே இந்த மரக்கன்றுகள் நடும் பணி இப்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் ஒட்டுமொத்தமாக 786 பூங்காக்கள் மக்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை போக சாலையோர மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டு 104 பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 113 போக்குவரத்து தீவுத் திட்டுகள் மற்றும் 163 சாலையோர பூங்காக்களும் இயங்கி வருகின்றன.

இத்தனை பூங்காக்களையும் பராமரிக்கச் சென்னை மாநகராட்சி பசுமை சென்னை, நமக்கு நாமே திட்டம் ஆகியவை மூலம் புனரமைத்து வருகிறது.
இந்த ஒட்டுமொத்தமான 786 பூங்காக்களில் 584 பூங்காக்கள் ஒப்பந்தமுறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. 145 பூங்காக்கள் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 57 பூங்காக்கள் பொதுமக்கள் தத்தெடுப்பதன் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே சென்னை மாநகராட்சி, கழிவுநீர் கால்வாய்களை முறையாக முடிந்தவரைப் புனரமைத்தது. ஆகவேதான் வெள்ளநீர் தேங்காமல் சென்னைக் காப்பாற்றப்பட்டது.
அதேபோல இந்த ஆண்டு பருவமழை தொடங்குவதற்கு முன் சரியான நேரத்தில் சென்னை முழுவதும் உள்ள ஏரிகள், பூங்காக்கள், சாலையோர பூங்காக்கள் என அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகளை நடப்பட்டுள்ளன.

இதனால் மரக் கன்றுகள் பருவமழையில் சரியாக வேர் பிடித்து வளர தொடங்கும் என்று உறுதியாக நம்பலாம்.
சென்னை என்பது தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் பெருநகரம். ஒவ்வொரு விரிவாக்கத்தின் போது அதிகம் பாதிக்கப்படுவது நிழல் தரும் மரங்கள்தான். சாலை விரிவாக்கம், பாதாளச் சாக்கடை விரிவாக்கம் என அனைத்து வேலைகளால் இன்று சென்னையைச் சுற்றியுள்ள மரங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டன.

அதை உயர்ந்ததால்தான் இந்த 'பசுமை சென்னை' திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார். அவரது உத்தரவின் பேரில்தான் ராஜமுந்திரியில் இருந்த மரக்கன்றுகள் வரவழைக்கப்பட்டு நடப்பட்டுள்ளன.
இது குறித்து நம்மிடம் பேசிய மாநகராட்சி அதிகாரி ஒருவர், "சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆலோசனையின் படி மரக்கன்றுகள் நடும் பணி கடந்த மாதம் தொட்டே நடைபெற்று வருகிறது.

சென்னையைச் சுற்றியுள்ள பூங்காக்களின் பசுமையையும் அதிகரிக்கச் செய்வதற்காக 16 ஆயிரம் மரக்கன்றுகள் ஆந்திராவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான மரக்கன்றுகளை நட்டுவிட்டோம். மொத்தம் 15 மண்டலங்களில் இந்த மரக்கன்று நடும் வேலைகள் நடந்து வருகின்றன" என்றார்.

கடந்த 2022-23-ம் நிதியாண்டில் அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு திட்டத்தின் மூலமாக மட்டும் 2 லட்சத்து 59 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications