என். எஸ். கிருஷ்ணன் கொடுத்த 1 ரூபாய் சம்பளம்… ஒரு நொடியில் அதை ரூ.10,000 ஆக மாற்றிய கருணாநிதி
சென்னை: தனது 80 ஆண்டு பொது வாழ்க்கையில் சரியாக 65 திரைப் படங்களுக்குக் கதைவசனம் எழுதி இருக்கிறார் மு.கருணாநிதி. இந்தப் பட்டியலில் அவரது படம் என இல்லாமல் வெளியான திரைப்படங்களையும் சேர்த்தால் பட்டியல் இன்னும் நீளும்.
ஒரு வசனகர்த்தாவாக 75 படங்களில் பணியாற்றி இருக்கிறேன் என்று ஒரு கட்டுரையின் மு.கருணாநிதியே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

அவரது வசனத்தில் 'ராஜகுமாரி' 1947இல் வெளியானது. அதுதான் அவரது முதல் திரைப்படம். அன்று அவர் 23 வயது இளைஞர். அதைவிடக் கூடுதலான விஷயம் அன்று இந்தியாவுக்கு சுதந்திரமே கிடைக்கவில்லை.
இதைவிட ஹைலட் என்ன தெரியுமா? பின்னாளில் அவரின் அரசியல் எதிரியாக மாறிய எம்.ஜி.ராமச்சந்திரன்தான் 'ராஜகுமாரி'யின் கதாநாயகன். இது வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.
தனது முதல் படம் வெளியான மகிழ்ச்சியை மு.கருணாநிதியால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. காரணம், அப்பாவின் மரணம். தந்தையை இழந்த தனயன் ஆனார் கருணாநிதி.

இவரது இளமைக்காலத்தில் இந்திய விடுதலைக்கான பிரச்சாரக் களமாகத் தமிழ் சினிமா உலகம் விளங்கிக் கொண்டிருந்தது. அதை பகுத்தறிவுப் பாதையின் பக்கம் திருப்பியவர்களில் முன்னோடியாக இருந்தவர் மு.கருணாநிதி.
சினிமாவை கலையாகப் பார்க்கவேண்டுமா அல்லது பிரச்சார ஊடகமாகப் பார்க்கவேண்டுமா என அவரின் காலத்திலேயே சர்ச்சைப் புயல் வீசியது. அதற்கான பதிலை கருணாநிதியே கூறியிருக்கிறார்.

'பேசும் படம்' பத்திரிகைக்காக அவர் அளித்த பேட்டியை, 'நம்நாடு' (16.04.78) ஏட்டில் மறுபிரசுரம் செய்திருந்தார். அதில், 'தமிழ்ப் படங்கள் கலைப்படைப்புகளாகவே விளங்கவேண்டும் என்று விரும்புகிறவர்களைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
அதற்கு கருணாநிதி, "தமிழ்ப் படங்கள் கலைப் படைப்புக்களாகவும் இருக்கவேண்டும். அதேசமயம் கருத்துப் புதையல்களாகவும் விளங்கவேண்டும் என்ற கருத்துடையவன் நான்.

'வேலைக்காரி', 'பராசக்தி', 'சொர்க்கவாசல்', 'மனோகரா', 'நாடோடி மன்னன்', 'நெஞ்சில் ஓர் ஆலயம்', 'அவள் ஒரு தொடர்கதை', 'சாரதா', 'குலதெய்வம்' இந்த வரிசையில் எத்தனையோ கலை ஒளியும் கருத்தொளியும் கொண்ட படங்கள் வரவில்லையா? அவற்றை மக்கள் வரவேற்கவில்லையா? நான் சில படங்களை மட்டுமே நினைவுபடுத்தினேன். இந்த வரிசையில் புகழ் பரப்பிய திரைக் காவியங்கள் பல உண்டு" என விளக்கி இருந்தார்.
ஆக, கலையும் கருத்தும் இணைந்த இரு கோடுகள் என்பதே அவரது சினிமா கொள்கையாக இருந்துள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர்களில், மு.கருணாநிதி எத்தனை படங்களில் பணியாற்றி இருக்கிறார் என்பதை அறிந்தவர்கள் மிகக் குறைவு. அவர் பணியாற்றிய படங்களின் பட்டியலை கூகுளில் தேடினால் விக்கிப்பீடியா காட்டும். ஆனால், அதற்குப் பின்னால் உள்ள சுவாரஸ்ய சம்பவங்களை அந்தத் தளம் சொல்லாது.

ஆகவே, அவரது முழுப் பட்டியலுடன் சில உணர்ச்சிகரமான கதைகளையும் இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும்.
முதலில் அவரது படங்களின் முழுப் பட்டியல்:
1, ராஜகுமாரி (1947), 2, அபிமன்யு (1948), 3, மருத நாட்டு இளவரசி (1950), 4, மந்திரி குமாரி (1950), 5, தேவகி (1951), 6, மணமகள் (1951) , 7, பராசக்தி (1952), 8, பணம் (1952), 9, நாம் (1953), 10, திரும்பிப் பார் (1953), 11, மனோகரா (1954), 12, மலைக்கள்ளன் 1954), 13, அம்மையப்பன் 1954), 14, ராஜா ராணி 1956), 15, ரங்கூன் ராதா (1956), 16, புதையல் (1957), 17. புதுமைப்பித்தன் (1957), 18, குறவஞ்சி (1960), 19, எல்லோரும் இந்நாட்டு மன்னர் (1960), 20, தாயில்லா பிள்ளை (1961), 21, இருவர் உள்ளம் (1961), 22, காஞ்சித் தலைவன் (1963), 23, பூமாலை (1963), 24, அவன் பித்தனா? (1966), 25, மணிமகுடம் (1966), 26, தங்கத் தம்பி (1967), 27, வாலிப விருந்து (1967), 28, எங்கள் தங்கம் (1970), 29, பிள்ளையோ பிள்ளை (1972), 30, பூக்காரி (1973), 31, அணையா விளக்கு (1975), 32, வண்டிக்காரன் மகன் (1979), 33, நெஞ்சுக்கு நீதி (1979), 34, ஆடு பாம்பே (1979), 35, குலக்கொழுந்து(1981), 36, மாடி வீட்டு ஏழை (1981), 37, தூக்குமேடை (1982), 38, இது எங்க நாடு (1983), 39, திருட்டு ராஜாக்கள் (1984), 40, காவல் கைதிகள் (1984), 41, குற்றவாளிகள் (1985), 42, காகித ஓடம் (1986), 43, பாலைவன ரோஜாக்கள் (1986), 44, நீதிக்குத் தண்டனை (1987), 45, ஒரே ரத்தம் (1987), 46, வீரன் வேலு தம்பி (1987), 47, சட்டம் ஒரு விளையாட்டு (1987), 48, புயல் பாடும் பாட்டு (1988), 49, மக்கள் ஆணையிட்டால் (1988), 50, பாசப் பறவைகள் (1988), 51, இது எங்கள் நீதி (1988), 52, பாடாத தேனீக்கள் (1988), 53, தென்றல் சுடும் (1989), 54, பொறுத்தது போதும் (1989), 55, நியாயத் தராசு (1989), 56, பாசமழை (1990), 57, காவலுக்குக் கெட்டிக்காரன் (1990), 58, மதுரை மீனாட்சி (1993), 59, புதிய பராசக்தி (1996), 60, கண்ணம்மா (2005), 61, பாசக் கிளிகள் (2006), 62, உளியின் ஓசை (2008), 63, பெண் சிங்கம் (2010), 64, இளைஞன் (2011), 65, பொன்னர் சங்கர் (2011)

இவைதான் சரியான பட்டியல். விக்கிப்பீடியாவில் முறையான ஆண்டுகள் இல்லை. சரியான விவரங்கள் இல்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
பட்டியலைப் பார்த்துவிட்டோம். அது என்ன உணர்ச்சிகரமான கதைகள்?
நிறைய இருக்கின்றன. சிலவற்றை மட்டும் இங்கே சொல்கிறோம்.
'ராஜகுமாரி'யில் இருந்து கருணாநிதியின் திரை உலக தொடங்கினாலும், என்.எஸ்.கே எடுத்த 'மணமகள்' படத்தின் மூலம்தான் கருணாநிதிக்கு சரியான சம்பளம் கிடைத்தது. அந்தக் கதையை இறுதியாகச் சொல்கிறோம். முதலில் தனது சம்பளம் பற்றி கருணாநிதியே சொன்ன செய்தியைப் படியுங்கள்.
"திருவாரூரில் இருந்துகொண்டு கூட்டங்களுக்குப் போவதும், எழுதுவதுமாக இருந்தபோது, என்னுடைய நண்பர் கவி கா.மூ.ஷெரீப் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் பாட்டு எழுதும் பணியிலிருந்தார்.

அவர் ஒருநாள் என்னைப் பார்க்க திருவாரூர் வந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளர் டி.ஆர். சுந்தரம் என் எழுத்துக்களை விரும்புவதாகவும், திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதற்கு அழைப்பதாகவும் கூறி அவரும் வலியுறுத்தி என்னை அழைத்துச் சென்றார். மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் 1949 ஆம் ஆண்டில் அங்கே பணியில் சேர்ந்தேன்" என்கிறார்.
இந்த 500 அப்படியே பத்தாயிரம் ஆனது. அந்தக் கதையையும் படியுங்கள்.

தனது 'மணமகள்' படத்திற்குக் கருணாநிதி வசனம் எழுதவேண்டும் என விரும்பினார் என்.எஸ்.கிருஷ்ணன். இருவரும் கொள்கைக் கூட்டாளிகள். ஆகவே சம்பளம் பேசுவதில் சில சங்கடங்கள் இருந்தன. ஆகவே, என்.எஸ்.கிருஷ்ணன், 'சம்பளம் எவ்வளவு?' என விளையாட்டாக வினவினார். கருணாநிதி புன்னகைத்தார். உடனே விளையாட்டாக ஒரு வெள்ளைக் காகிதத்தில் '00001' எழுதி நீட்டினார் என்.எஸ்.கிருஷ்ணன்.
அதை வாங்கிப் பார்த்த கருணாநிதி, மிகச் சாதுரியமாகக் காகிதத்தைத் திருப்பிக் காட்டினார். அதில் 10000 எனக் காட்டியது. வியந்து போனார் என்.எஸ்.கிருஷ்ணன். அதுவே சம்பளமாக உறுதியானது!













Click it and Unblock the Notifications