முஸ்லிம் ஓட்டுகளால் தப்பிய.. முக்கிய தொகுதிகள்! இல்லைன்னா.. திமுக ரொம்ப அடி வாங்கியிருக்கும்!
சென்னை: தமிழகம் முழுவதும் வீசிய விஜய் அலையில், திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பெரும் தோல்வியை சந்தித்திருக்கின்றன. இருப்பினும் முஸ்லிம் வாக்குகளால் திமுகவுக்கு சில முக்கியமான தொகுதிகள் கையை விட்டு போகாமல் இருந்திருக்கின்றன.
திமுக இந்த முறை வெறும் 59 இடங்களில் சுருங்கிவிட்டது. இருப்பினும் சில பாரம்பரிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு முஸ்லிம் ஓட்டுகள் முக்கியமான காரணமாகும்.

சென்னையில் நிலைமை
சென்னையை எடுத்துக்கொண்டால், கடந்த 1991க்கு பிறகு வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி என்பது இதுதான் முதல் முறை. சேப்பாக்கம், துறைமுகம் தொகுதிகளில் திமுக வெற்றிப் பெற்றிருக்கிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமாக இருக்கின்றனர். இந்த வாக்குகள் அப்படியே சிந்தாமல் சிதறாமல் திமுகவுக்கு விழுந்திருக்கின்றன. எனவே இங்கு திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி
அதேபோல, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியிலும் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம். ஆம்பூரை பொறுத்தவரை, திமுகவின் வில்வநாதன் 74,102 வாக்குகள் பெற்று, 7,131 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரை வீழ்த்தியிருக்கிறார். அதேபோல வாணியம்பாடியில், திமுக கூட்டணியில் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.
கோவை தெற்கு தொகுதியிலும் முஸ்லிம் வாக்குகள் அதிகம். அங்கும் திமுகதான் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, 2271 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறார்.
20,000 வாக்குகள்
அரவக்குறிச்சி தொகுதியை எடுத்துக்கொண்டால், இங்குள்ள பள்ளப்பட்டி பகுதியில் வாழும் முஸ்லிம்கள்தான் தொகுதியின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் மொத்த ஓட்டும் அப்படியே திமுகவுக்கு விழுந்திருக்கிறது. இந்த தொகுதியில் போட்டியிட்ட இளங்கோ. ஆர் சுமார், 19,382 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரை வீழ்த்தியிருக்கிறார்.
அப்படியே தென் தமிழகம் பக்கம் வந்தால், தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இஸ்லாமியர்கள் அதிகம். இந்த தொகுதியில் திமுகவின் வேட்பாளர் அவர்கள் வெற்றி பெற செய்திருக்கிறார்கள்.
தென் தமிழகம்
ராமநாதபுரத்தில் 12,459 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை முஸ்லிம்கள் ஜெயிக்க வைத்திருக்கிறார்கள். நாகப்பட்டினத்தில் 9,781 வாக்குகள் வித்தியாசத்தில் ஜவாஹருல்லாவையும், பாளையங்கோட்டை தொகுதியில், 13,805 வாக்குகள் வித்தியாசத்தில் அப்துல் வாஹாப்-யும் முஸ்லிம்கள் ஜெயிக்க வைத்திருக்கிறார்கள். இது தவிர வாசுதேவநல்லூர், திருவாரூர் உள்ளிட்ட தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களை முஸ்லிம்கள் ஜெயிக்க வைத்திருக்கிறார்கள்.
இந்த கணக்கில் மதுரை மத்தி, திருச்சி கிழக்கு, பெரம்பூர், வில்லிவாக்கம், வேலூர் என குறைவான தொகுதிகள் மிஸ்ஸிங். இங்கு தவெக வெற்றி பெற்றிருக்கிறது.
காரணம் என்ன?
மத்தியில் இருக்கும் பாஜகவை எதிர்த்து தைரியமாக குரல் கொடுக்கும் கட்சி திமுகதான் என்பதை இஸ்லாமியர்கள் நம்பியிருக்கின்றனர். குறிப்பாக திருப்பரங்குன்றம் விஷயத்தில் மதவாத சக்திகளுக்கு துணை போகாமல் தனித்து நின்றிருக்கிறார்கள். இதெல்லாம் திமுக மீதான நம்பிக்கையை இஸ்லாமியர்களுக்கு அதிகரிக்க செய்திருக்கிறது. எனவேதான் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications