மீண்டும் எம்எல்ஏ ஆக முடியுமா பொன்முடி? கைகொடுக்குமா உச்சநீதிமன்ற உத்தரவு? அங்கதான் ட்விஸ்ட்
சென்னை: பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ள நிலையில், அவர் மீண்டும் எம்எல்ஏவாக அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சாத்தியமா? என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீது, கடந்த 1996 முதல் 2002 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதத்தையும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என மக்கள் பிரதிநிதிகள் யாராக இருந்தாலும், அவர்கள் குற்ற வழக்கில் 2 ஆண்டுகள் அல்லது, அதற்கு மேல் தண்டனையை பெற்றால் அவர்களது பதவி பறிபோய்விடும். இதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக பொன்முடியின் எம்எல்ஏ பதவி பறிபோனது.
இதனையடுத்து அவரது தொகுதியான திருக்கோவிலூர் காலியானதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு எதிர் வரும் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது உச்சநீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது.
இது பொன்முடி தரப்புக்கு கிடைத்த மிகப்பெரிய நிவாரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் பொன்முடி மீண்டும் எம்எல்ஏவாக தொடர முடியும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதாவது சமீபத்தில் ராகுல் காந்திக்கும் அவதூறு வழக்கு ஒன்றில் 2 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இதனால் அவர் தன்னுடைய எம்பி பதவியை இழந்தார். அரசு சார்பில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த இல்லம் காலி செய்யப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில், அவருக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து ராகுல் காந்தி தற்போது எம்பியாக தொடர்கிறார்.
அதேபோல, பொன்முடியும் மீண்டும் எம்எல்ஏவாக தொடர முடியும். தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலை பெற்று, தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை அணுகும்போது, பொன்முடி மீதான பதவி பறிப்பு நடவடிக்கை ரத்து செய்யப்படும். இதனையடுத்து அவர் மீண்டும் எம்எல்ஏவாக தொடர முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால், தீர்ப்பை நிறுத்தி வைத்தால்தான் எம்எல்ஏ ஆக முடியும். தண்டனையை நிறுத்தி வைத்தால் மட்டும் எம்எல்ஏ ஆகிவிட முடியாது என ஓய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications