2025ம் ஆண்டிற்கான வைக்கம் விருது! கலிபோர்னியாவைச் சேர்ந்த தேன்மொழி சௌந்தரராஜனுக்கு அறிவிப்பு!
சென்னை: ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசால் வைக்கம் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த தேன்மொழி சவுந்தர்ராஜனுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டமன்றப் பேரவையில், கடந்த 30.03.2023 அன்று எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியார் அவர்களை நினைவுகூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் "வைக்கம் விருது" சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று சட்டமன்றப் பேரவை விதி 110-இன்கீழ் அறிவித்தார்.

அதன்படி, 2025-ஆம் ஆண்டிற்கான "வைக்கம் விருது" தேன்மொழி சௌந்தரராஜன் அவர்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தேன்மொழி சௌந்தரராஜனுடைய பெற்றோர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
அமெரிக்காவில் வசித்து வரும் தேன்மொழி சௌந்தரராஜன், இந்திய அமெரிக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஆவார். கட்டமைப்பு சாதியத்தால் ஓரங்கட்டப்பட்டவர்களின் உரிமைகளுக்காக அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். அமெரிக்காவிலும், உலக அளவிலும் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் சிவில் உரிமைகள் அமைப்பான ஈக்வாலிட்டி லேப்ஸின் நிறுவனர் / நிர்வாக இயக்குநர் ஆவார்.
தேன்மொழி சௌந்தரராஜன் அவர்கள் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் சாதி பாகுபாட்டிற்கு எதிரான அவரது பணிகளுக்காகவும், ஊடகம் மற்றும் தொழில்நுட்ப நீதித் துறையில் அவரது பங்களிப்புகளுக்காகவும் அறியப்படுகிறார். தேன்மொழி சௌந்தரராஜன் அவர்கள் "The Trauma of Caste A Dalit Feminist Meditation on Survivorship, Healing, and Abolition" புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். இதன் நோக்கம் சாதியின் பெயரால் பாகுபாடு காட்டப்படுவதை முடிவுக்கு கொண்டு வருவதாகும். இந்த படைப்பிற்காக இவர் Asian/Pacific American Awards for Literature (APAAL) பெற்றுள்ளார். மேலும், தெற்காசிய ஆய்வுகள் துறையில் புலமைப்பரிசில் (scholarship) South Asian Literary Association (SALA) Award-யும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைக்கம் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தேன்மொழி செயந்தரராஜன் அவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் என்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications