NOTA: நோட்டா ஆப்ஷனும் இல்லை.. விவி பேட் முறையும் இல்லை.. தேர்தலில் புதுமுறை.. ஏன் தெரியுமா?
இந்த தேர்தலில் நோட்டா ஆப்ஷன் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரங்களில் நோட்டாவும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவி பேட் கருவியும் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம், தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடக்க விருக்கிறது..
இந்த தேர்தலில் 1,374 மாநகராட்சி கவுன்சிலர்கள், 3,843 நகராட்சி கவுன்சிலர்கள், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.

நோட்டா கிடையாது
பலமுனை போட்டி நிலவும் நிலையில், தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 12,838 இடங்களுக்கு, 57,778 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். ஒரு குடிமகன் தங்களின் தொகுதி அல்லது வார்டில், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விருப்பம் இல்லாத பட்சத்தில் நோட்டா (NOTA - None of the above) என்ற பட்டனை அழுத்தி வாக்கைச் செலுத்தலாம்.. அதன்படி, கடந்த 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பட்டன் சேர்க்கப்பட்டது.

நோட்டா பட்டன்
நம் தமிழ்நாட்டில் 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஏற்காடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில்தான், முதன்முதலில் நோட்டா பட்டன் வாக்கு செலுத்தும் இயந்திரத்தில் இடம்பெற்றது... கடந்த எம்பி மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் நோட்டா பட்டன் இடம்பெற்றது.. அதாவது, வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்தியதும், முன்பகுதியில் தனியாக வைக்கப்பட்டிருக்கும் விவி பேட் கருவியில் வாக்களித்த சின்னம், வேட்பாளர் பெயர் கொண்ட சீட்டு ரோலராக வரும்..

விவி பேட் கருவி
ஆனால், இப்போது நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா பட்டன் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வி.வி.,பேட் கருவியும் பயன்படுத்தப்படாது என கூறப்படுகிறது.காரணம், உள்ளாட்சித் தேர்தல் விதிமுறை 2006-ல் திருத்தும் கொண்டுவரவேண்டும் என்றால், அதனை மாநில அரசு தான் செய்யவேண்டும் என்றும், தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் தேர்தல் முடிந்த பின்பு தான் அரசு திருத்தம் செய்ய முடியும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..

விவிபேட் முறை
எனவே, வாக்காளர்கள் இந்த தேர்தலில் நோட்டாக்கு வாக்களிக்க முடியாது... அதேபோல, வாக்காளர்கள் தங்களின் வாக்கைச் செலுத்திய பின்னர், வாக்களித்ததை உறுதி செய்யும் விவிபேட் சீட்டும் இந்த முறை இருக்காது... யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியின் தேர்தல் அதிகாரியிடம் 17 -B விண்ணப்பத்தை வாங்கி யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று எழுதிக்கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெரிந்துவிடும்
ஆனால், அப்படி ஒருவர் எழுதிக்கொடுத்தால், வாக்குச்சாவடியில் அமர்ந்திருக்கும் கட்சி உறுப்பினர்களுக்குச் சம்பந்தப்பட்ட நபர் வாக்களிக்கவில்லை என்பது தெரிந்துவிடும்... அப்படி தெரிந்துவிட்டால், அது பல சிக்கல்களை உருவாக்கலாம்.. அதனால் எத்தனைபேர் இப்படி வெளிப்படையாக எழுதி தருவார்கள் என்பது தெரியாது என்று சமூகஆர்வலர்கள் கருத்து சொல்லி வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications