தமிழர்களை தீவிரவாதிகள், நாகரீகம் அற்றவர் என்கிறார்கள்! பாஜகவின் வன்மம் வெளிப்பட்டுவிட்டது.. ஸ்டாலின்
சென்னை: இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இவர்கள் கொண்டு வரும் தேசிய கல்விக் கொள்கையை எக்காரணம் கொண்டும் ஏற்காது. நம் உரிமைக்கான போர்க்குரலைத் தமிழ்நாடு தொடர்ந்து எழுப்பும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தமிழர்களை தீவிரவாதிகள், நாகரிகம் இல்லாதவர்கள் என்று பேசிவிட்டு பிறகு வருத்தம் தெரிவித்தாலும், தமிழர்கள் மீது பாஜகவினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிட்டது என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வரும் புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்த்து வருகிறது. குறிப்பாக அதில் இடம்பெற்று உள்ள மும்மொழிக் கொள்கை மூலம் தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2152 கோடியை மத்திய அரசு தர மறுக்கிறது.

மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் அந்த நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். ஆனால் ரூ.10 கோடி கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையை ஏற்கமாட்டோம் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கிடையே தான் நேற்று லோக்சபாவில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் ஸ்டாலின் முதலில் ஆதரித்தார் என்றும் பின்னர் சூப்பர் சிம் சொன்னதின் பேரில் தமிழக அரசு பின்வாங்கிவிட்டது என்றும் கூறினார். இதற்கு உடனடியாக பதில் அளித்த ஸ்டாலின், புதிய தேசிய கல்வி கொள்கையை ஒருபோதும் தமிழகம் ஏற்றதில்லை என்று கூறினார்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய கல்வி கொள்கையை எக்காரணம் கொண்டும் ஏற்காது என்று இன்று எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:- 2024-இல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் ஷோபா: "தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்!" 2025-இல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்: "தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்!" இப்படியெல்லாம் பேசிவிட்டுப் பின்பு வருத்தம் தெரிவித்தாலும், பேசியபோது தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது.
"இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இவர்கள் கொண்டு வரும் #NEP-யை எக்காரணம் கொண்டும் ஏற்காது. நம் உரிமைக்கான போர்க்குரலைத் தமிழ்நாடு தொடர்ந்து எழுப்பும்" எனச் செங்கல்பட்டு அரசு விழாவில் ஆணித்தரமாகத் தெரிவித்தேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழர்கள் பற்றி பேசியதற்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டன.












Click it and Unblock the Notifications