பாஜகவை விஜய் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை.. தவெக புறக்கணிப்புக்கு பின்னணி காரணம் சொன்ன திருமாவளவன்
சென்னை: "பாஜகவை எதிர்க்க கூடாது என்ற பதற்றம் விஜய்க்கு இருக்கிறது. அதனால் அவர்கள் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடர்பாக விவாதிக்க திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை" என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் வருகிற 4 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமன்றி கூட்டணியில் இல்லாத கட்சி தவெக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்கவில்லை. தமிழ்நாடு
அரசு சார்பில் கூட்டத்தை கூட்டி இருந்தால் பங்கேற்று இருப்போம் எனவும் திமுக சார்பில் கூட்டம் நடைபெறுவதால் பங்கேற்க முடியாது எனவும் அக்கட்சி நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர். இந்நிலையில், "பாஜகவை எதிர்க்க கூடாது என்ற பதற்றம் விஜய்க்கு இருக்கிறது. அதனால் அவர்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை" என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் எம்.பி, "SIR வாக்குரிமை மீதான தாக்குதல் அல்ல. குடியுரிமையை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல். வாக்குரிமையை பறிக்கும் நோக்கில் வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. NCR-ஐ நடைமுறைப்படுத்த குடியுரிமையை பறிக்க வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும். SIR மூலம் தேசிய குடியுரிமை சட்டத்தை மறைமுகமாக கொண்டுவர திட்டமிடுகிறார்கள். தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும்போது SIR பணிகள் மேற்கொள்ளக்கூடாது என சட்டம் உள்ளது. 1 கோடி பேரின் பெயர்களை நீக்கி தேர்தலை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பாஜகவை எதிர்க்கக்கூடாது என்ற பதற்றம் விஜய்க்கு இருக்கிறது. அதனால் அவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பாஜகவை பகைத்துக் கொள்ள விஜய் விரும்பவில்லை என்றுத் தெரிகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்த தவெக தலைவர் விஜய், "நம் மண்ணின், மக்களின் உரிமையைக் காக்க, அரசியல் வேற்றுமைகளைப் புறந்தள்ளி இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இருக்கிறது. அதே சமயம், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை வெறும் வாக்கு அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் தி.மு.க.வின் சூழ்ச்சியையும் அறிந்தே இருக்கிறோம்.
அண்டை மாநிலமான கேரள அரசு, சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கை, அம்மக்களின் உரிமை மீதான அக்கறையைக் காட்டுகிறது. ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ளும் தி.மு.க, இதுகுறித்துச் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? தொகுதி மறுவரையறையை எதிர்க்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு, அரசு சார்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே அதில் கலந்துகொண்டு, மக்கள் உரிமைகளுக்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாட்டினைத் தெரிவித்தோம்.
ஆனால், சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிரான தி.மு.கவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான நோக்கத்தையும் பின்னணியையும் மக்கள் அறியாமல் இல்லை. தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க.வின் இத்தகைய முன்னெடுப்பின் நோக்கம். தி.மு.க. அரசு மீது வரிசை கட்டி வரும் ஊழல் புகார்களில் இருந்து மக்களைத் திசை திருப்பும் கபட நாடக அரசியலே.
சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக ஏற்கெனவே தமிழ்நாட்டில் முதல் குரலாக ஓங்கி ஒலித்தது தமிழக வெற்றிக் கழகத்தின் குரல்தான். இதை நாடும் நாட்டு மக்களும் நன்றாகவே அறிவர். நாம் முதன்முதலாகக் குரல் எழுப்பிய அந்த நேரத்தில் தி.மு.க தூங்கிக்கொண்டிருந்ததா? ஒன்றிய பா.ஜ.கவுடன் மறைமுக உறவுக்காரராக இருந்ததால் மறதி மயக்கத்தில் இருந்ததா? ஏதோ இப்போது மட்டும் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிராக முதன்முதலாக விழித்துக்கொண்டது போலவும், தான் மட்டுமே ஜனநாயக உரிமையின் ஒற்றைப் பாதுகாவலன் போலவும் கபட நாடக வேடத்தைப் பூண்டுள்ளது அப்பட்டமான ஏமாற்று வேலை.
இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றுவதைப் போல எல்லோரையும் ஏமாற்றி விடலாம் என்று தி.மு.க நினைக்கிறதா? இந்தக் கேள்விகள் மக்கள் மனத்திலும் எழுந்துள்ளன. எனவே, தி.மு.க.வின் கபட நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை" என அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார் விஜய்.












Click it and Unblock the Notifications