ஜோசப் விஜய்.. இந்த பெயருக்காக சிறுபான்மை வாக்குகள் கிடைக்காது.. திருமாவளவன் போடும் கணக்கு!
சென்னை: ஜோசப் விஜய் என்ற பெயருடன் இருப்பதால், தமிழக வெற்றிக் கழகத்திற்கு சிறுபான்மை மக்கள் ஆதரவு அளித்துவிட மாட்டார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விஜய் அரசியல் வருகை அனைத்து கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள திருமாவளவன், திமுக மற்றும் அதிமுக எதிர்ப்பு வாக்கு வங்கியில் விஜய் சிதறலை ஏற்படுத்துவார் என்றும் கணித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்-ன் 51வது பிறந்தநாள் விழா அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் விஜய், இதுவரை களத்திற்கே வரவில்லை. ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னரும் கூட விஜய் இன்னும் களத்திற்கு வராதது அக்கட்சியினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

தவெகவுக்கு ஆதரவு
இதனிடையே விஜய்-ன் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக அக்கட்சியினர் கூறி வருகின்றனர். அதேபோல் தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கிய போது, எட்டிய வாக்கு சதவிகிதத்தை விஜய் நிச்சயமாக எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விஜய் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்குகள் விஜய்-க்கு கிடைக்கும் என்று கூறி வருகின்றனர்.
திருமாவளவன் பேட்டி
இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், விஜயை மதம் சார்ந்த, சாதி சார்ந்த கட்சியாக பார்க்க முடியாது. விஜயகாந்தை நாயுடு கட்சி என்று சொல்ல முடியாது. சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் என்பதால், அவர் கட்சி தொடங்கிய பின், தமிழ்நாடு முழுவதும் கிளைகளை உருவாக்கினார்கள். அனைத்து சமூக அடுக்குகளிலும் தவெக இருக்கிறது. அனைத்து சமூகங்களிலும் முதல் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் ஆதரவு இருக்கும்.
எம்ஜிஆர்-க்கும் எதிர்ப்பு
ஆனால் தமிழ்நாட்டில் அரசியல்படுத்தப்பட்ட வாக்காளர்கள் அதிகம் இருக்கிறார்கள். அவர்கள் ஒருநாளும் வாக்குகளை மாற்றி அளிக்க மாட்டார்கள். எம்ஜிஆர் போன்ற ஒரு மாஸ் தலைவர் இருக்கும் போது, நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வென்றுள்ளது. எவ்வளவு பெரிய தலைவர் இருந்தாலும், அவருக்கு எதிரான வாக்கு வங்கி இருக்கும். விஜய் வருவதால் 100 சதவிகிதமும் மாறிவிடுவார்கள் என்று சொல்ல முடியாது.
சிறுபான்மை மக்கள் ஆதரவு
கடந்த சில தேர்தல்களில் மக்கள் எப்போது எப்படி யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்கள். விஜய் வந்தார் என்றால், சினிமா மயக்கத்தில் தலித், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வாக்களித்துவிட மாட்டார்கள். ஜோசப் விஜய் என்பதால், கிறிஸ்தவர்களுக்காக வாக்களிக்க வேண்டும் என்று நினைப்பார்கள் என்று தோன்றவில்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் இன்னும் அரசியல்ரீதியாக ஒருங்கிணைந்திருக்கிறதா என்றால் இல்லை.
வாக்கு வங்கி சிதறும்
சோசியல் மீடியாவில் ஒவ்வொரு வாக்காளனும் அரசியல் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். சினிமா வேறு, அரசியல் வேறு, சாதி வேறு, மதம் வேறு என்பதில் தெளிவாக இருக்கிறார். விஜய்-க்கு அனைத்து சமூகங்களில் இருந்தும் வாக்குகள் செல்லும். ஆனால் அந்த வாக்குகள் விஜயை ஆட்சியில் அமர வைக்குமா என்றால், நிச்சயம் கிடையாது. திமுக, அதிமுக எதிர்ப்பு வாக்கு வங்கி சிதறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
விஜய் கூட்டணி அமைக்க முடியுமா?
அந்த சிதறல்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் விஜய்-க்கு வாக்கு அளிக்கலாம். நிச்சயமாக விஜய் அரசியல் வருகை அனைத்து கட்சிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் ஆட்சி மாற்றத்தை உண்டு செய்யும் அளவிற்கு பாதிப்பு இருக்காது. அதேபோல் விஜயால் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் குறைவு. அடுத்த முதல்வர் என்று சொல்லும் விஜய், எடப்பாடி பழனிசாமிக்கு கீழ் எப்படி நிற்பார்? அப்படி நின்றால் ரசிகர்களை சமாளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications