விஜய்க்காக உதய்க்கு துணை முதல்வர் பதவியா.. திருமாவளவன் சொன்ன நச் பதில்!
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. உதயநிதி ஸ்டாலினும் துணை முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகைக்காக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மாலை 3.30 மணிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அதேபோல, 4 பேர் புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்பட உள்ளனர். அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார்.

தங்கம் தென்னரசு நிதித் துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். அமைச்சர் ராஜகண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். அமைச்சர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கீடு அமைச்சராக நியமனம் செய்யப்பட உள்ளார். செந்தில் பாலாஜி உட்பட 4 பேருக்கும் எந்த இலாகாக்கள் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் அமைச்சராக சேர்க்கப்படும் நிலையில் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளனர். துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்கவுள்ள நிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், துணை முதல்வர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது: துணை முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் பல மாற்றங்களைச் செய்திருக்கிறார்.
புதிதாக சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது முதல்வருக்கான தனிப்பட்ட சுதந்திரம், அவருக்கான அதிகாரம். எனவே, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என்கிற முறையில் இந்த மாற்றங்களை வரவேற்கவும், வாழ்த்தவும் கடமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் முதல்வருக்கு உற்ற துணையாக இருப்பார் என்கிற நம்பிக்கையோடு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தன்னுடைய கடமைகளை உதயநிதி சிறப்பாக ஆற்றுவார் என்ற நம்பிக்கையோடு அவரை வாழ்த்துகிறேன். கலைஞர் முதல்வராக இருந்தபோது ஸ்டாலின் துணை முதல்வராக ஆக்கப்பட்டார். அப்போது என்ன நோக்கத்துக்காக, எந்த குறிக்கோளுக்காக அந்த பொறுப்பு வழங்கப்பட்டதோ அதே அடிப்படையில் தான் இப்போது உதயநிதிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன்.
கட்சியையும், ஆட்சி நிர்வாகத்தையும் தனக்கு அடுத்தபடியாக பொறுப்பேற்று அவர் திறம்பட ஆற்றுவார் என்ற நம்பிக்கையில் முதல்வர் இந்தப் பதவியை வழங்கும் முடிவை எடுத்திருப்பார். மற்றபடி விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவாக எனக்குத் தென்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications