ஸ்ட்ரைட்டாவே சொல்லிட்டாரு திருமாவளவன்.. போலி தமிழ்தேசியவாதிகளிடம் ஜாக்ரதையா இருங்க: சீறும் "தம்பிகள்"
விசிக திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் சீமானை மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளதாக தெரிகிறது
சென்னை: உண்மையான அம்பேத்கரியவாதிகள் ஒருநாளும் பாஜகவில் இணைய மாட்டார்கள் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.. திரிபுவாத அரசியலை பேசிவரும் போலி தமிழ் தேசியவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து வருகிறார். ஆனால் சீமான் பேசுவது இனத்தூய்மை வாதம் என்றும், திராவிட சித்தாந்தத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு சனாதனம் பேசுகிற பாஜகவிற்கு துணை போவதாகவும் திமுக மற்றும் திராவிடகழக தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது.
மற்றொருபக்கம் "தந்தை பெரியார் தெலுங்கு வந்தேறி" என்றும், "தமிழ்நாட்டில் தெலுங்கர்களின் ஆதிக்கம் அதிகரித்து விட்டது" என்றும் சீமான் தொடர்ந்து பேசியும் வருகிறார்.

B டீம்
எனவே, "பாஜகவின் பி-டீம்" என்றும், "திமுகவின் பி-டீம்" என்றும், மாறி மாறி சீமான் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.. இந்த இரு குற்றச்சாட்டுகளையுமே சீமான் மறுத்தும் விளக்கம் தந்தும் வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து சீமான் கடுமையாக சாடியிருந்தார்.. இந்த விஷயத்தில் திடீரென என்ட்ரி தந்திருந்தார் திமுகவின் பிரசாந்த் கிஷோர்.. சீமான் பேசிய அந்த வீடியோவை, ட்விட்டரில் வெளியிட்டு, சீமான் மீது ஏன் நடவடிக்கை இல்லை? என்று நியாயம் கேட்டிருந்தார் பிரசாந்த் கிஷோர். இதையடுத்து சீமான் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது..

நல்லக்கண்ணு
இந்நிலையில், திருமாவளவன் நேற்றைய தினம் விழா ஒன்றில் பேசியிருந்தது மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது.. "சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் விசிக திருமாவளவனின் மணிவிழா வாழ்த்தரங்கம் நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்..

ஒட்ட நறுக்குவோம்
அப்போது திருமாவளவன் பேசும்போது, "கடந்த 2011 தேர்தலில் திமுகவிடம் 6 மாதங்களுகுகு முன்பே திருவிடைமருதூர் தொகுதி எங்களுக்கு வேண்டும் என்று கேடட்டோம். ஆனால் நாங்கள் வளர்ந்து விடுவோமோ என்கிற நோக்கிலோ என்னவோ தெரியவில்லை.. அதை தரவில்லை.. தென்மாவட்டங்களில் தொகுதிகளை தர மாட்டேன் என்று 2006 தேர்தலில் ஜெயலலிதா சொல்லிவிட்டார். ஜனநாயக சக்திகள் இணைந்து சனாதன சக்தகளின் வாலை ஒட்ட நறுக்குவோம். இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்பதை கூர்மைப்படுத்துகிறார்கள். பார்ப்பனர்கள் இந்து என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்கிறார்கள்.

சுரண்டல்
சிலர் வடமாநில தொழிலாளர்களை அடித்து விரட்டுவோம், கஞ்சா கேஸ் போடுவோம் என்று சொல்லி வருகின்றனர். அதானி, அம்பானி போன்ற முதலீட்டு வந்தேறிகள் அல்லவா? எதிர்க்கப்பட வேண்டியவர்கள்.. விரட்டி அடிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை விட்டுவிட்டு 100 ரூபாய் வாங்கும் இடத்தில் 50 ரூபாய்க்கு வேலை செய்து கொண்டு, 3 வேளை சாப்பிட முடியாமல் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விட்டு தமிழ் முதலாளிகளின் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் தொழிலாளர்களை விரட்டுவோம் என்பது எந்த விதத்தில் நியாயம்? முதலாளிகளை, சுரண்டல்வாதிகளை விட்டு விட்டு தொழிலாளர்களை விரட்டுவது என்பது அயோக்கியத்தனம்.

அயோக்கியத்தனம்
பிறமொழி பேசுவதற்காகவே ஒருவனை அடித்து விரட்டுவது என்பது இனவாதம். இனவாதம் பேசினால் அது இனவெறிக்குள் போய் முடியும். இனவெறி என்பது தமிழ் தேசியம் கிடையாது. தமிழ் தேசியத்தின் எதிரி இந்திய தேசியமாகத்தான் இருக்க முடியும்.
அவர்களே கற்பனை செய்து கொண்டு திராவிடத்தை எதிர்ப்பதாக பெரியாரை எதிர்க்கிறார்கள். பெரியாரை எதிர்க்கிறார்கள் என்றால் பார்ப்பனியத்திற்கு துணை போகிறார்கள் என்றுதானே பொருள். பெரியாரை எதிர்க்கிறார்கள் என்றால் அம்பேத்கர், மாமேதை மார்க்ஸ் ஆகியோரை எதிர்ப்பதாகவே பொருள். திராவிடம் என்பது சமூகநீதிக்கான அரசியல், ஆரியத்திற்கு எதிரான அரசியல், அதை முதன்முதலில் உச்சரித்தது பண்டிதர் அயோத்திதாசர்.

சிறுத்தைகள்
திராவிடத்தை எதிர்க்கக்கூடியவன் பெரியாரை எதிர்க்கக்கூடாது, பண்டிதரை தான் எதிர்க்க வேண்டும்... ஆரியத்தை எதிர்க்க வேண்டிய இடத்தில் திராவிடத்தை எதிர்க்கிறார்கள். கோல்வாக்கரை எதிர்க்க வேண்டிய இடத்தில் பெரியாரை எதிர்க்கிறார்கள். இது திரிபுவாத அரசியல். இத்தகைய போலி தமிழ்தேசிய திரிபுவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டும்.. உண்மையான அம்பேத்கரியவாதிகள் ஒருநாளும் பாஜகவில் இணைய மாட்டார்கள்.. சனாதனவாதிகள் அடிப்படை வசதி கல்வி சுற்றுசூழல் ஆற்று மணல், சமூக நீதி, இடஒதுக்கீடு எது பற்றியும் பேச மாட்டார்கள்.. மதத்தை பற்றி மட்டுமே பேசுவார்கள்.. வெறுப்பை மட்டுமே விதைப்பார்கள்.. ஹிட்லருக்கு பிறகு ஆர்எஸ்எஸ்தான்..

சீமான் தம்பிகள்
சிலர் பேசுவது தமிழ் தேசியம் கிடையாது. திரிபுவாதம். இனவாதம் பேசுகிறார்கள். அதனால் விரட்டி அடிக்க வேண்டியவர்கள் அம்பானியும் அதானியும்தானே தவிர, பிழைக்க வரும் தொழிலாளிகள் கிடையாது. இனவெறுப்பு என்பது தமிழ் தேசியம் இல்லை. ஆரியத்தை எதிர்க்க வேண்டிய இடத்தில் திராவிடத்தை எதிர்க்கிறார்கள். போலி தமிழ் தேசியம் மற்றும் போலி அம்பேத்கரியவாதிகளிடம் இருந்து தமிழ்நாட்டை பாதுகாக்க வேண்டும்" என்று திருமாவளவன் பேசியுள்ளார். சீமானை மறைமுகமாக விமர்சிப்பதாகவே, திருமாவின் பேச்சு அமைந்திருப்பதாக கருதப்படுகிறது..இதையடுத்து, சீமானின் தம்பிகள் திரண்டுவந்து, விசிகவை சரமாரியாக விமர்சித்து கொண்டிருக்கிறார்கள்..!!












Click it and Unblock the Notifications