7+1 ராஜ்ய சபா சீட் தரேன்னு ஸ்டாலின் சொன்னாரு.. நான் என்ன சொன்னேன் தெரியுமா? திருமாவளவன் விளக்கம்
சென்னை: விசிகவுக்கு 7 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கூட்டணி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்ற பொறுப்புடன் செயல்பட்டதாக கூறிய திருமாவளவன், இரட்டை இலக்கத்தில் சீட் கொடுங்கள்.. இல்லையென்றால் வெளியில் போகிறேன் என்று பேச வராது என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதலில் இரட்டை இலக்கத்தில் விசிக தொகுதிகளை கோரி வந்த நிலையில், பின்னர் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் வரவால் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிவிட்டது. இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக நிர்வாகிகள் கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், திமுக கூட்டணியில் 23 கட்சிகள் இருக்கிறது. பல கட்சிகளுக்கும் தொகுதிகளை குறைக்கிறார்கள். கடுமையாக குறைக்க வேண்டிய நிலை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். அப்போது நான் சென்று எனக்கு 12 சீட் கொடுங்க.. 15 சீட் கொடுங்க..
இல்லையென்றால் வெளியில் செல்கிறேன் என்று எனக்கு பேச விருப்பவில்லை.. அப்போது நானே 8 தொகுதிகள் கொடுங்க.. கையெழுத்து போடுகிறேன் என்று நானாக கூறிவிட்டு முடிவு செய்து கையெழுத்து போட்டேன்.. கூட்டணியின் தலைவர் ஸ்டாலின் இடத்தில் இருந்து நான் பார்க்கிறேன். பல கட்சிகளும் அவரை நெருக்குகிறார்கள்.
இன்னொரு விஷயமும் சொல்கிறேன்.. 7 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா தருகிறேன் என்று ஸ்டாலின் சொன்னார்.. கடந்த முறை 7 தொகுதிகள் வாங்கிவிட்டே படாதபாடு பட்டேன்.. சுமார் 20 மணி நேரமாக கூச்சல், பிரச்சனை இருந்தது. ஒரு கட்டத்தில் ரத்த அழுத்தம் உயர்ந்துவிட்டது.. கொடுக்கும் இடங்கள் குறைவாகவும், அதனை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ளது. நான் தான் அதற்கு காரணம்.
ஏனென்றால் அனைவரும் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று நானே ஆசையை தூண்டிவிட்டேன். வாங்கிய 8 சீட்டுக்கு 2,050 பேர் விருப்ப மனு கொடுத்தார்கள்.. சிலர் என்னுடன் நெருக்கமாக இருந்து கொண்டு நெருக்கினார்கள். ஒரு கட்டத்தில் 8+1 என்று கேட்டிருந்தால் கூட கொடுத்திருப்பார்கள். ஆனால் கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற பொறுப்புடன் நான் செயல்பட்டேன்.
இதனை பெருமையாக கூறிக் கொள்கிறேன். என்னென்னவோ ஆசை காட்டினார்கள். ஆனால் எதற்கும் அசையவில்லை. திமுகவுக்கு கொத்தடிமையாய் இருக்கிறார் என்று கூட சிலர் பேசினார்கள். ஆனால் கலைஞர் காலம் தொட்டு இப்போது வரை திமுகவில் யாரும் என்னை இப்படி செயல்படு, இப்படி பேசு என்று கூட கூறியதில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications