22 ஆண்டுகள் பழமையானது.. பொத்தென விழுந்த பால்கனிகள்.. இன்று வீடுகளே தரைமட்டம்.. மக்கள் குமுறல்
சென்னை: திருவொற்றியூர் சேதமடைந்த கட்டட இடிபாடுகளில் யாரும் சிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள். இதன் மூலம் இடிந்த கட்டடத்திலிருந்து அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர்.
Recommended Video
சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குப்பத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடம் உள்ளது. இது 1996 ஆம் ஆண்டு காலத்தில் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் 365 வீடுகள் உள்ளன.
இந்த கட்டடத்தில் டி பிளாக்கில் உள்ள 24 வீடுகளும் தரைமட்டமாகின. இதையடுத்து இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என போலீஸார் தேடி வருகிறார்கள். இதையடுத்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

வீடுகளில் விரிசல்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் நேற்றே சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் இன்று காலை டி பிளாக்கில் ஒரு வீட்டில் விரிசல் இருப்பதை அறிந்தனர். இதையடுத்து அங்கிருந்த 24 குடும்பத்தினரும் வெளியேறிவிட்டனர்.

இடிபாடுகள்
சற்று தாமதத்திருந்தாலும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். நல்ல வேளையாக நாங்கள் அனைவரும் வெளியேறிவிட்டோம். இடிபாடுகளில் யாரும் சிக்கவில்லை. நாங்கள் அண்மையில் வாங்கிய டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. பொருட்கள் போனாலும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதால் நிம்மதியாக இருக்கிறது.

கட்டிய உடை
துணி மணி எதுவும் இல்லை. கட்டிய உடைகளுடன் நாங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு வெளியேறிவிட்டோம். தற்போது பாதுகாப்பான இடங்களில் தற்காலிகமாக தங்கியுள்ளோம். ஆனால் நாங்கள் நிரந்தரமாக எங்கு தங்குவது? இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல முறை
ஏற்கெனவே இந்த வீட்டின் பால்கனிகள் எல்லாம் நிறைய முறை விழுந்துள்ளன. அப்போதெல்லாம் அதிகாரிகளிடம் பல முறை புகார் கொடுத்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இது போல் சி பிளாக்கிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. 22 ஆண்டுகள் பழமையான இந்த வீட்டில் பராமரிப்பு பணிகளே இதுவரை மேற்கொண்டதில்லை. இதுவும் வீடு இடிந்து விழுந்ததற்கு காரணமாகும் என்றனர். இந்த பகுதியில் இதற்கு முன்னர் குளம் இருந்ததால்தான் இதற்கு அரிவாக்குளம் என பெயரிடப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். எனவே இந்த வீடுகள் குளத்தின் மீது கட்டப்பட்டவையா என்ற கேள்வியும் எழுகிறது.












Click it and Unblock the Notifications