எப்படியாவது ஜெயிக்க நினைக்கும் பாஜக.. 45 நாள் கழித்து வரும் ரிசல்ட்டால் சந்தேகம் கிளப்பும் திமுக
சென்னை: லோக்சபா தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்காக 45 நாட்கள் காத்திருப்பது குறித்து அரசியல் கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுவை திரும்பப்பெற மார்ச் 27 கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. ஆனால் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. அதாவது வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே 45 நாட்கள் இடைவெளி இருக்கின்றன. இது குறித்து திமுகவின் தலைவர்களில் ஒருவரான இளங்கோவன் அச்சம் தெரிவித்துள்ளார். அதாவது,
"இந்த 45 நாட்களில் வாக்கு பெட்டிகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்திருக்கிறது. பாஜக எப்படி வேண்டுமானாலும் வெற்றி பெற முயன்று வரும் நிலையில் இந்த அச்சம் எழுந்திருக்கிறது. கடந்த காலங்களில் வாக்கு பெட்டிகள் ஓட்டல் அறைகளில் இருந்த செய்திகளை எல்லாம் பார்த்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே பல கட்டங்களாக தேர்தல் நடத்துவது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன. ஒன்று அல்லது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படாமல், 7 கட்டங்களாக நடத்துவதன் மூலம் பிரதமர் மோடி மற்றும் ஆளும் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல தேர்தல் ஆணையம் வழிவகுத்து கொடுக்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
அதேபோல தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது எனில், தேர்தல் நாளுக்கு ஒரு நாளைக்கு முன்னர் அனைத்து வகையான பிரசாரங்களும் நிறுத்தப்படும். ஆனால், பல கட்டங்களாக பிரித்து தேர்தல் நடத்தப்படும் மாநிலங்களில் பிரதமர் மோடி பரப்புரையை மேற்கொண்டிருப்பார். இது டிவி, சோஷியல் மீடியா, நாளிதழ்கள் உள்ளிட்ட ஊடகங்கள் வழியாக தமிழ்நாட்டு மக்களை எட்டும். இதை எப்படி ஏற்றுக்கொள்வது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், "பல கட்டங்களாக தேர்தல்களை நடத்தும் நடைமுறை என்பது தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறும் செயலாகும். மட்டுமல்லாது முழுக்க முழுக்க ஆளும் கட்சிக்கு ஆதரவான செயல்பாடு" என்று விமர்சித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications