1000 முதலமைச்சர் உழவர்நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.. விவசாயிகளுக்காக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டின் 2025-26 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025ஐ வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது பேசி வருகிறார். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் 2025 தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், உழவர்களின் வாழ்வில் இந்த நிதி நிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்புகிறேன் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். கடந்த 4 ஆண்டுகளில், மொத்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்வு, 346 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி, 1.86 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வேளாண் இயந்திரம் ஆக்குதல் திட்டத்தின் கீழ் ரூ.510 கோடி செலவில் மானிய விலையில் இயந்திரம் வழங்ப்பட்டுள்ளன என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும், வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன.
2021-24 வரை, 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நீர் பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் ரூ.3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.102 கோடி ஒதுக்கீடு. தரமான விதைகள் வழங்க ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு. 3 லட்சம் ஏக்கரில் கோடை உழவு செய்ய ரூ.24 கோடி மானியம் வழங்கப்படும்.
முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும். நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து மரணத்திற்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்வு. இயற்கை மரணத்திற்கான நிதி ரூ.20,000ல் இருந்து ரூ.30,000 உயர்த்தப்படும். இறுதி சடங்கு நிதி உதவி ரூ.2,500ல் இருந்து ரூ.10,000 உயர்த்தப்படும் என அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடக்கிறது. வேளாண்மை பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் வரும் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருவதை முன்னிட்டு அனைத்து திமுக எம்எல்ஏக்களும் பச்சை துண்டு அணிந்து வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications