நான் ஸ்டாலின்.. சிறு பிள்ளை விளையாட்டுக்களுக்கு பயப்பட மாட்டேன்.. சட்டசபையில் முதல்வர் கர்ஜனை
சென்னை: தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், பெரியார்.. அண்ணா வாரிசுகள் போல செயல்படுவதாக கூறினார். நான் ஸ்டாலின் இது போன்ற சிறுபிள்ளை விளையாட்டுக்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையின் 2024ஆம் ஆண்டுக்கான கூட்டத்தொடர் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் புறக்கணித்து விட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி. கடந்த ஆண்டு சில வார்த்தைகளை மட்டும் படிக்காமல் விட்ட ஆளுநர் ரவி இந்த ஆண்டு முழு உரையையும் படிக்காமல் புறக்கணித்தார். வணக்கம் கூறி ஆரம்பித்து நன்றி ஜெய் பாரத்.. ஜெய் ஹிந்த் என்று கூறி 2 நிமிடத்தில் முடித்து விட்டார்.
இதனையடுத்து முழு உரையையும் தமிழில் வாசித்து அதனை சட்டசபை அவைக்குறிப்பில் இடம் பெற செய்தனர். ஆளுநர் ரவிக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ரவிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார் சபாநாயகர் அப்பாவு.
இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. சட்டசபையில் நேற்றைய தினம் இரண்டு முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை என்றும், தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராகவும் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நான்காவது நாளான இன்று சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று பதில் அளித்து பேசினார். அப்போது தமிழக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார் முதல்வர் ஸ்டாலின். அரசின் உரையை ஆளுநர் அப்படியே வாசிக்க வேண்டும். அரசு தயாரித்த உரையை ஆளுநர் படிக்காதது அவமதிக்கும் செயல் என்றும் கூறினார்.
அரசியல் செய்யும் விதமாக ஆளுநர் நடந்து கொள்கிறார். நான் ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இது போன்ற சிறுபிள்ளை விளையாட்டுக்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன். திமுக அரசு பொறுப்பேற்று 33 மாதங்களில் எல்லாமே சாதனைதான். திராவிட மாடல் அரசு செய்வதை பிற மாநிலங்கள் அமல்படுத்துகின்றன. வடக்கின் வளர்ச்சிக்கு தெற்கும் சேர்த்து வரி கொடுக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
விடுமுறைக்குப் பிறகு வரும் 19ஆம் தேதியன்று 2024-25 ஆம் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தாக்கல் செய்கிறார். 20ஆம் தேதியன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். 22ஆம் தேதி வரை தமிழக சட்டசபை அலுவல்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications