ஆஃப் ஆகாத அண்ணாமலை.. “டைம் வரட்டும்.. மேல இருக்கவங்க பார்த்துப்பாங்க”.. அதிமுக முடிவு பற்றி கருத்து
சென்னை: பாஜக கூட்டணியைவிட்டு அதிமுக வெளியேறுவதாக அறிவித்து உள்ள நிலையில், அனைத்தையும் பாஜக தேசிய தலைமை பார்த்துக்கொள்ளும் என அறிவித்து உள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அதிமுக வெளியிட்டு உள்ள தீர்மான அறிவிப்பில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை" சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் சுழகப் பொதுச் செயலாளர், மான்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 - திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது." என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது குறித்து கோவையில் யாத்திரை சென்று வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப சென்றபோது முதலில் கருத்து தெரிவிக்க மறுத்தார். சிறிது நேரம் கழித்து ஊடகங்களுக்கு அவரளித்த பேட்டியில், "தற்போது யாத்திரை சென்று கொண்டு இருக்கிறேன். அதிமுகவின் செய்திக் குறிப்பை படித்தேன்.
அது தொடர்பாக எங்களது தேசிய தலைமை சரியான நேரத்தில் பதிலடி கொடுக்கும். ஊடத்துறையினருக்கு நன்றி. எங்களுக்கு என்று வழிமுறைகள் உள்ளன. எங்கள் தேசிய தலைமை சரியான நேரத்தில் பேசும்." என்றார்.












Click it and Unblock the Notifications