தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்? 5 அமைச்சர்களை தூக்க முதல்வர் விஜய் திட்டம்! யாருக்கு சவுக்கடி
சென்னை: தமிழக அமைச்சரவையில் மிக முக்கியமான மாற்றங்களைச் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தற்போதைய அமைச்சரவையில் உள்ள 5 முக்கிய அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அவர்களுக்குப் பதிலாக இடைத்தேர்தலில் வெற்றி பெற்று வரும் முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

7 தொகுதி இடைத்தேர்தல்
தமிழகத்தில் தற்போது 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழல் நெருங்கி வருகிறது. முதல்வர் விஜய் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றை, அதாவது திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதியை முறைப்படி ராஜினாமா செய்ததாலும், அதிமுகவைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததாலும் இந்த 7 இடங்கள் காலியாகின.
இந்த 7 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் மிகத் தீவிரமாக உள்ளார். இந்த இடைத்தேர்தல் களம், தவெக ஆட்சியின் மீதான ஆசிட் டெஸ்ட்டாக பார்க்கப்படும் என்பதால், இதில் வெற்றி பெறும் புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக அமைச்சர் பொறுப்புகளை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
5 அமைச்சர்கள் மீது அதிருப்தி ஏன்?
முதல்வர் விஜய்யின் தற்போதைய அமைச்சரவை ரேடாரில் உள்ள அந்த 5 அமைச்சர்கள் மீது பல்வேறு காரணங்களுக்காக தலைமை கடுமையான அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே நிர்வாகத் திறமையின்மை, மக்கள் குறைகளைக் கண்டுகொள்ளாத போக்கு மற்றும் துறை சார்ந்த கோப்புகளில் சுணக்கம் காட்டியது போன்ற புகார்கள் இவர்கள் மீது எழுந்துள்ளன.
சில அமைச்சர்கள் மீதான மறைமுக ஊழல்
இவை அனைத்திற்கும் மேலாக, தூய்மையான மற்றும் நேர்மையான அரசியலை வழங்குவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தவெக அரசுக்கு, ஒரு சில அமைச்சர்கள் மீதான மறைமுக ஊழல் புகார்களும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலான செயல்பாடுகளும் முதல்வர் விஜய்யை பெரும் அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தங்களது துறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஒப்பந்தப் புள்ளிகள் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாகவும் உளவுத்துறை மூலமாக முதல்வருக்கு ரகசிய அறிக்கைகள் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
விஜய்யின் சமரசமற்ற முடிவு
திராவிடக் கட்சிகளின் 60 ஆண்டுகால அரசியல் ஆதிக்கத்தை உடைத்து, தமிழகத்தில் ஒரு மாற்று ஆட்சியை அமைத்துள்ள விஜய், தனது அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் யாரையும் சகித்துக் கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.
ஊழல் மற்றும் புகார்களில் சிக்கும் நபர்களை அமைச்சரவையில் நீடிக்க அனுமதித்தால், அது வரவிருக்கும் 7 தொகுதி இடைத்தேர்தலில் தவெகவின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்று அவர் கருதுகிறார்.
விரைவில் பதவியிலிருந்து நீக்க முடிவு
எனவே, இந்த 5 அமைச்சர்களையும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, இடைத்தேர்தல் முடிந்த கையோடு அமைச்சரவையை முழுமையாக மாற்றி அமைக்க கோட்டையில் ரகசிய ஆலோசனைகள் தற்போதே தொடங்கிவிட்டன.
விஜய் எடுக்கப்போகும் இந்த அதிரடி நடவடிக்கை, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications