மெரினாவில் பிரமாண்டம்..நாளை கருணாநிதி நினைவிடம் திறப்பு! நீங்கள் சுற்றிப்பார்க்க சூப்பரான வழிகாட்டி
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை நாளை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைக்கும் நிலையில் அதை சுற்றுப்பார்ப்பது எப்படி என்று பார்ப்போம்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், “உலகத் தமிழினத்தின் மிக உயர்ந்த தலைவர்களாகத் திகழ்ந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்தபின் அவருக்குச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அதனை மிகச் சிறந்த கட்டடக்கலை வடிவமைப்புடன் 1969 ஆம் ஆண்டில் அமைத்தவர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!

தமிழ்நாட்டு வரலாற்றில் 19 ஆண்டு காலம் முதலமைச்சராக வீற்றிருந்து, தமிழ் நாட்டை வளப்படுத்தி, தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி; இந்திய அரசியலில் எழுச்சியை ஏற்படுத்தி, உலக வரலாற்றில் உன்னதப் புகழ்ச் சின்னமாகத் திகழும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமது 95ஆம் வயதில் 2018 ஆகஸ்டு திங்கள் 7ஆம் நாள் மறைந்து, நீதிமன்றத்தின் ஆணை பெற்று பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் அருகிலேயே இடம் கொண்டார்கள்.
பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. சென்னைக் கடற்கரை – காமராசர் சாலையில் அமைந்துள்ள இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம் – முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் அழகுறப் பொறிக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் எதிரில் அமர்ந்து படிப்பது போன்ற தோற்றத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலை; வலபுறம் இளங்கோவடிகள், இடப்புறம் கம்பர் சிலைகள் அமைந்து நம்மை மகிழ்விக்கின்றன.
நினைவிடங்களின் முன்பகுதி இருபுறங்களிலும் பழமையான புல் வெளிகள் அமைந்துள்ளன. இடப்புறத்தில் 'அண்ணா அருங்காட்சியம்’ அமைந்துள்ளது. பேரறிஞர் அண்ணா சதுக்கம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி அமைந்த மண்டபங்கள் வெண்மை நிறத்தில் பளிச்சிடுகின்றன. “எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது” எனப் பொறிக்கப்பட்டுள்ள, பேரறிஞர் அண்ணா அவர்கள் துயில்கொள்ளும் சதுக்கத்தைக் கடந்து சென்றால், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அமர்ந்து எழுதும் வடிவிலான சிலையைக் காணலாம். சிலையைக் கடந்து சென்றால் எதிரே அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நினைவிடம், நம் நெஞ்சை ஒருக் கணம் அமைதி கொள்ளச் செய்கிறது.
நினைவிடத்தில், “ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர், இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்” எனும் தொடர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது. கலைஞர் நினைவிடத்தின் முன்னே இருபுறமும், தமிழ் செம்மொழி என ஒன்றிய அரசு ஏற்ற முடிவைத் தெரிவித்துப் பாராட்டி, காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு 8-11-2005 அன்று எழுதிய கடிதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் அமைக்கப் பட்டுள்ளன.
'கலைஞர் உலகம்’ எனும் அருங்காட்சியகம்!
நினைவிடத்தின் பின்புறம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புன்னகை பூத்த முகம் பொன்னிறத்தில் மிளிர்வதுடன் சுற்றிலும் மின்விளக்குகள் விண்மீன்களாக ஒளிர்கின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தின் கீழே நிலவறைப் பகுதியில், “கலைஞர் உலகம்” எனும் பெயரில் ஓர் அருமையான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 'கலைஞர் உலகம்’ பகுதியில் இடப்புறம் சென்றால், நடைபாதையின் வலப்புறத்தில், கலைஞர் நிர்மாணித்த திருவள்ளுவர் சிலை, குடிசை மாற்றுவாரியம் முதலியவை படங்களாக அமைக்கப்பட்டு விளக்கொளியுடன் மிளிர்கின்றன.
உள்ளே வலப்பக்கம் திரும்பினால், இடப்பக்கச் சுவரில் தமிழ்த்தாய் வாழ்த்து பொறிக்கப் பட்டுள்ளது. அதன் கீழ்ப்புறம், 'தமிழ்த்தாய் வாழ்த்து அரசு நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும்’ என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 23-.11.-1970 அன்று பிறப்பித்த அரசாணையும், 'தமிழ்த் தாய் வாழ்த்து மாநிலப் பாடல்’ என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 17-.12.-2021 அன்று பிறப்பித்த அரசாணையும், அவர்களின் படங்களுடன் இடம் பெற்று நம்மை மகிழ்விக்கின்றன.
அருகில், 'கலைஞரின் எழிலோவியங்கள்’ எனும் அறை – அதில், கலைஞரின் இளமைக் காலம் முதல், அவர் வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்வுகள், கலைஞரின் படைப்புகள், அவர் சந்தித்த போராட்டங்கள், நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப் படங்கள் அமைந்து நமக்கு மலைப்பைத் தருகின்றன.
அடுத்து “உரிமைப் போராளி கலைஞர்” எனும் தலைப்பைக் கொண்ட அறையில் நுழைந்தால் – தேசியக் கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றிட உரிமை பெற்றுத் தந்த கலைஞரின் வெற்றியைக் குறிக்கும் வகையில், 'சென்னைக் கோட்டையில் முதன் முதல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து கலைஞர் உரையாற்றும் காட்சி’ அமைப்புடன் பின்புறம், தலைமைச் செயலகத்தின் முகப்புத் தோற்றம் அமைந்து நம்மை வரவேற்கிறது.
அடுத்து, கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அமர்ந்திருக்கும் தோற்றம் அருகில் நின்று புகைப்படம் எடுக்கலாம். சில நிமிடங்களில் புகைப்படம் நமக்கும் கிடைக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. வலப்புறத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மெழுகுச் சிலையாக நின்று நம்மை மகிழ வைக்கிறார். கலைஞர் படைப்புகள் – நெஞ்சுக்கு நீதி, குறளோவியம் தென்பாண்டிச் சிங்கம் முதலான 8 நூல்களின் பெயர்கள் காணப்படும். அவை ஒவ்வொன்றின் மீதும் நாம் கை வைத்தால், அந்த நூல் பற்றிய விளக்கம் வீடியோவாகத் தோன்றி நமக்கு அவற்றை எடுத்து உரைக்கும்.
அடுத்து, “அரசியல் கலை அறிஞர் கலைஞர்” எனும் அறைக்குள் செல்லலாம். எதிரே கலைஞரின் பெரிய நிழற்படம். வலப்பக்கம் இருக்கைகள் அமைக்கப்பட்டு, அவற்றின் எதிரில் வெள்ளித்திரை: அதில், ஏறத்தாழ 20 நிமிடங்கள் கலைஞர் அவர்களின் பிறப்பு முதல் இறுதி நாள் வரையான முக்கிய வரலாற்று நிகழ்வுகள்; அருமையான படக் காட்சிகளாக, 'கலையும் அரசியலும்’ எனும் தலைப்பில் நம்முன் தோன்றி நம்மை வியக்க வைக்கும் .
அடுத்த அறையில், “சரித்திர நாயகனின் சாதனைப் பயணம்” தலைப்புடையது. அதில் நுழைந்தால் திருவாரூர் முதல் சென்னை வரை ரயிலில் பயணிப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும். நாம் அமர்ந்த நிலையில், தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் ரயில் நிலையங்களைக் கடந்து சென்னையை அடையலாம். அந்தந்த ஊர்களில் கலைஞர் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகள் காட்சிகளாகத் தோன்றும்.
வழியில் யானையொன்று நாம் பயணிக்கும் ரயில் பாதையை மறித்து நின்று நமக்கு வணக்கம் செலுத்தி, வாழ்த்துவது நம்மை மெய் சிலிர்க்க வைத்திடும். அறைகளுக்கு வெளியே அமைந்துள்ள நடையில் இருபுறங்களிலும், பெண்ணியக் காவலர், ஏழைப் பங்காளர், நவீன தமிழ் நாட்டின் சிற்பி, உலகளாவிய ஆளுமைகளுடன் கலைஞர் முதலான தலைப்புகளில் அமைந்த அரிய புகைப்படங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் 5 தொலைக்காட்சிப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.
நேர் எதிரே- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் தோன்றும் அருமையான புகைப்படம் பெரிய அளவில் அமைந்து, “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி” எனும் குறள் தொடரைத் தலைப்பாகக் கொண்டுள்ளது. இப்பகுதியின் இறுதியில் காந்தவிசையைப் பயன்படுத்தி அமர்ந்த நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் அந்தரத்தில் மிதக்கும் காட்சி, நம்மை அற்புத உலகிற்கு அழைத்துச் செல்லும். நடை பாதையை விட்டு, வெளியே வந்தால், நேர் எதிரே கலைஞர் புத்தக விற்பனை நிலையம் அமைந்துள்ளது. அங்கே, கலைஞர் எழுதிய நூல்கள் அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவற்றையெல்லாம் கண்டு வெளியே வர முனைந்தால் வழியில் வலப்புறச் சுவர்களில் – தமிழர்களின் கலாச்சார மையம். வள்ளுவர் கோட்டம், பாம்பன் பாலம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முகப்புக் கட்டடம், மெட்ரோ ரயில், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய முத்தமிழறிஞர் கலைஞர் படைத்த நவீனங்களின் தோற்றம் வண்ண விளக்கொளியில் நம்மை மயங்க வைக்கின்றன. இவற்றையெல்லாம் பார்த்து வெளியே வர நினைத்தால், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடன் கலந்து பேசிப் பழகிய ஓர் புதிய அற்புத உணர்வு நமக்கு ஏற்படும்.
வெளியே வரும்போது – இருபுறங்களிலும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பொன்மொழிகள் கற்பாறைகளில் தமிழிலும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு நம் இதயத்திலும் பதியும் வண்ணம் அருமையாக அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடமும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புதிய நினைவிடமும் – பல ஆண்டுகள் வரை நம் நெஞ்சைவிட்டு என்றும் நீங்காமல் நம்மை ஆட்கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்ச் சமுதாயத்தின் தன்னிகரில்லாப் பெருமைகளைத் தரணியில் உயர்த்தி, நிலைநாட்டிய ஒப்பிலாத் தலைவர்களான பேரறிஞர் அண்ணா அவர்களின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புதிய நினைவிடத்தையும் நாளைய தினம் (26-2-2024 – திங்கள்கிழமை) மாலை 7.00 மணி அளவில் திறந்து வைக்கிறார்கள்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications