“பேர் சொல்லும் பிள்ளை”.. தம்பி என நெகிழ்ந்த ஸ்டாலின்! உச்சி குளிர உதயநிதிக்கு பாராட்டு-ஏன் தெரியுமா?
சென்னை: கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் முக ஸ்டாலின் பாராட்டி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசுகையில், "இந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியில் 73 ஆயிரத்து 206 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தப் போட்டி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. கலைஞர்னாலே கின்னஸ் சாதனை தான். இந்த மாரத்தான் போட்டியில் 50,629 ஆண்களும், 21,514 பெண்களும் பங்கேற்று ஓடியிருக்கிறார்கள் உலகத்திலேயே முதன்முறையாக திருநங்கைகள், திருநம்பிகள் 1063 பேர் பங்கேற்று ஓடி ஒரு மிகப் பெரிய சாதனையை படைத்திருக்கிறார்கள்.

அதைத்தான் நம்முடைய மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி அவர்கள் உங்களை எல்லாம் ஊக்குவிக்க அவருடைய சார்பில் திமுக இளைஞரணி சார்பிலே மாரத்தான் போட்டியிலே பங்கேடுத்த ஒவ்வொரு திருநங்கைகள் திருநம்பிகளுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து அதையும் இன்றைக்கு வழங்கியிருக்கிறார்.
இந்த மாரத்தானில், அரசு உயர் அதிகாரிகள், அதாவது ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்., காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கிறார்கள். அதேபோல் கடலோர காவல்படை, இராணுவ வீர்கள் 1500 பேரும் பங்கேற்று ஓடியிருக்கிறார்கள். பல்வேறு வெளிநாட்டு தூதர்கள் வருகை தந்திருக்கிறார்கள். எனவே இது சாதாரண மாரத்தான் அல்ல. இது சமூகநீதி மாரத்தானாக அமைந்திருக்கிறது.
நாம் எதைச் செய்தாலும் அதிலே ஒரு பெரிய சிறப்பு இருக்கும். பெருமை இருக்கும். பூரிப்பு இருக்கும். மகிழ்ச்சி இருக்கும். எழுச்சி இருக்கும். எல்லாவற்றையும் தாண்டி புதுமையும் இருக்கும். புரட்சியும் இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. கலைஞர் நூற்றாண்டு மாரத்தான். இதுவரை உலகத்திலே எங்கும் நடைபெறாத வகையில், சிறப்பாக நடைபெற்று இருக்கிறது.
இந்த ஆண்டுக்கான மாரத்தானில், 3 கோடியே 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வசூலாகி இருக்கிறது. அதையும் என்னிடம் திரு மா.க அவர்கள் வழங்கியிருக்கிறார். அது எதற்கு பயன்பெறக் போகிறது என்பதை அவரே சொல்லியிருக்கிறார். இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான கட்டடம் ஒன்று கட்டுவதற்கு இந்தத் தொகை பயன்படப் போகிறது என்று சொல்லியிருக்கிறார்.
தலைவர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள தொடங்கும்போது, தனது வாழ்நாளில் அனைத்துப் பெருமைகளையும் பார்த்துவிட்டார் கலைஞர் அவர்கள். எனவே இந்த விழா மக்களுக்கு பயன்பெறக்கூடிய அவர்களிடத்திலே எடுத்து சொல்லியிருந்தேன், அப்படியான ஒரு பயனுள்ள நிகழ்ச்சியாக இது அமைந்திருப்பது உள்ளபடியே எனக்கு மகிழச்சி அளிக்கிறது.

மாரத்தான் ஓட்டம் என்பது உடல் உறுதிக்கு மட்டுமல்ல, உள்ள உறுதிக்கும் அடித்தளமாக அமையும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் கூட்டுச் செயல்பாட்டை வலியுறுத்தும் இப்படியான போட்டிகள் அதிகம் நடத்தப்பட வேண்டும். தம்பி உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சராக, ஆனபிறகு விளையாட்டுத் துறை மேலும் பல மடங்கு எழுச்சி பெற்றிருக்கிறது.
உலகப் புகழ் பெற்ற போட்டிகள் நடக்கும் மாநிலமாக ஏற்கனவே செஸ் போட்டியை நடத்தினோம். இப்போது ஹாக்கி போட்டியை நடத்தி கொண்டிருக்கிறோம். இதுபோன்ற பல போட்டிகளை நடத்துவதற்கான முயற்சிகளை அரசு எடுத்துக் கொண்டு வருகிறது. இது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி கொண்டிருக்கிறது.
ஏராளமான புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் இது பயன்படுகிறது. அனைத்திலும் தமிழ்நாடு வளர வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எண்ணினார். அந்த எண்ணம் இன்றைக்கு ஈடேறிக்கொண்டு இருக்கிறது." என்றார்.












Click it and Unblock the Notifications