பொது சிவில் சட்டம் வேண்டவே வேண்டாம்! ஒற்றுமைக்கு ஊறு.. சட்ட ஆணைய தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
சென்னை: பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பொது சிவில் சட்டம் நீண்ட காலமாக விவாதத்தில் இருந்து வரும் நிலையில், அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற வந்தே பாரத் தொடக்க நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, பொது சிவில் சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதலின் படி பொது சிவில் சட்டம் அவசியமானது என்கிற கருத்தையும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யக் கூடும் எனவும் கூறப்படுகிறது. 22-வது சட்ட ஆணையமானது கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று, பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளிடம் இருந்து பொது சிவில் சட்டம் குறித்து கருத்துகளைக் கேட்டு வருகிறது.
ஜூலை 14ஆம் தேதி வரை பொது சிவில் சட்டம் குறித்த கருத்துகள் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளன. திமுக சார்பாக, திமுக துணை பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், சட்ட ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்திக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
பன்முகத் தன்மையை கொண்ட இந்தியாவின் முன்னேற்றத்துக்கும், ஒற்றுமைக்கும் பொது சிவில் சட்டம் ஊறு விளைவிக்கும். பொது சிவில் சட்டம் ஒரு கடுமையான அச்சுறுத்தலை முன்வைக்கிறது. சமூகத்தின் பல்வேறு கட்டமைப்புகளுக்கு சவால் விடுவதாக பொது சிவில் சட்டம் உள்ளது என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளா முதல்வர் ஸ்டாலின்.
மேலும், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக பொது சிவில் சட்டம் உள்ளது என்றும், அதனால் பொது சிவில் சட்டத்தை தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்க்கிறது என்றும் அக்கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், "மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் முக்கிய பகுதி என்றும், அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 25-ன்படி, "ஒருவர், தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்குமான உரிமையை உறுதி செய்துள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி அந்தந்த சமூகங்களின் பெரும்பாலான தனிப்பட்ட சட்டங்களுக்கு மத நடைமுறைகள் அடிப்படையாக உள்ளன என்றும், அத்தகைய தனிப்பட்ட சட்டங்களில் எந்த மாற்றத்தையும், மத சமூகங்களின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது மகத்தான தேசத்தின் கட்டமைப்பை உருவாக்கும் பல்வேறு சமூகங்களிடையே இணக்கமான வாழ்வை வளர்ப்பதே நமது
முதன்மை குறிக்கோளாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியான சட்டத்தைத் திணிப்பதற்குப் பதிலாக, மதங்களுக்கிடையிலான உரையாடல்களை வலுப்படுத்துவதிலும், சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதிலும், இந்தியாவை வரையறுக்கும் வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துவோம்.
சட்டங்களில், ஒரே மாதிரியான தன்மையை கொண்டுவர முயற்சிப்பதைவிட, அனைத்து மக்களுக்கும் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளில் ஒரேமாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்துவதை நமது நோக்கமாகக் கொள்ள வேண்டும்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications