சிட்டிங் எம்எல்ஏ நாகை மாலிக்கு 3 வாய்ப்பும் ஓவர்.. கீழ்வேளூர் தொகுதியில் களமிறங்கும் பெ.சண்முகம்?
நாகை: நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக உள்ள கீழ்வேளூர் தொகுதி மீண்டும் சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில், இதற்கான சாத்தியம் அதிகம் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சட்டசபைத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் சூழலில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணியில் கூடுதலாக மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ, தேமுதிக, முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்திருக்கின்றன.

இதனால் ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இம்முறையும் 6 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் சிபிஎம் கட்சிக்கு இம்முறையும் கீழ்வேளூர் தொகுதி ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. தனித்தொகுதிகளில் ஒன்றான கீழ்வேளூர் தொகுதி எப்போதும் சிபிஎம் கோட்டையாக இருக்கிறது.
திமுக, அதிமுக என்று எந்தக் கூட்டணியில் இடம்பெற்றாலும், இந்த தொகுதி சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்படும். 2011ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இருந்த சிபிஎம் கட்சிக்கு கீழ்வேளூர் தொகுதி ஒதுக்கப்பட்டு, அங்கு நாகை மாலி வெற்றி பெற்றார். இதன்பின் மக்கள் நலக் கூட்டணி 2016ல் உருவான போது, கீழ்வேளூர் தொகுதியில் சிபிஎம் கட்சியே போட்டியிட்டது.
ஆனால் அப்போது மீண்டும் போட்டியிட்ட நாகை மாலி தோல்வி அடைந்தார். தொடர்ந்து 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் சிபிஎம் இடம்பெற்றது. இந்த முறையும் நாகை மாலி கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதனால் 2026 சட்டசபைத் தேர்தலில் கீழ்வேளூர் தொகுதி சிபிஎம் வசம் அளிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.
அப்படி மீண்டும் ஒதுக்கப்பட்டால், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் களமிறங்கக் கூடும் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் சிபிஎம் விதிகளின்படி ஒரு நபருக்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும். அப்படி 4வது முறையாக நாகை மாலி களமிறங்க விரும்பினால், சிபிஎம் தரப்பில் சிறப்பு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும்.
இதனால் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேரடியாக களமிறங்குவார் என்றே பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த பெ.சண்முகம் போட்டியிடவில்லை என்றால், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரான சுபாஷ் சந்திர போஸ்க்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. ஒருவேளை திமுக நேரடியாக களமிறங்கினால் முன்னாள் அமைச்சர் மதிவாணன் போட்டியிடக் கூடும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications