'₹' பயன்பாட்டுக்கு வந்தது எப்படி? ரூபாய் குறியீட்டை உருவாக்கிய தமிழர்.. திமுக முன்னாள் MLA மகன்!
சென்னை: இந்திய ரூபாய்க்கு என தனி குறியீடு கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. ரூபாய் சின்னத்தை உருவாக்கியவர் தமிழரான உதயகுமார். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் லோகோவில் '₹' குறியீட்டுக்கு பதிலாக 'ரூ' என மாற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசின் 2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் மத்திய அரசின் ரூபாய் குறியீட்டை மாற்றி 'ரூ' என்ற தமிழ் எழுத்துடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் லோகோ வெளியிட்டுள்ளார். ரூபாய் குறியீடு பயன்பாட்டுக்கு வந்தபிறகு அதுவே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் 'ரூ' என மாற்றப்பட்டுள்ளது.

நாளை தமிழ்நாடு பட்ஜெட்
தமிழ்நாடு சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி முடிந்தது. இந்த நிலையில், சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. அதன்படி, சட்டசபையில் நாளை காலை 9.30 மணிக்கு 2025-2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய ரூபாயின் குறியீடுக்கு பதிலாக 'ரூ' இலச்சினை பயன்படுத்தி பதிவிட்டுள்ளார். முதலமைச்சரின் பதிவில், 'எல்லார்க்கும் எல்லாம்' என்கிற வாசகத்துடன் "சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட'' என குறிப்பிட்டு தமிழ்நாடு அரசின் பட்ஜெட் லோகோவை வெளியிட்டுள்ளார்.
₹ குறியீட்டுக்கு பதிலாக ரூ
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, கல்விக்கு நிதி வழங்காதது உள்ளிட்ட சர்ச்சைகள் எழுந்து நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் லோகோவில் தேவநாகிரி எழுத்தான '₹' குறியீட்டுக்கு பதிலாக 'ரூ' என மாற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 2025-2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டுக்கான லோகோவில் இந்த குறியீடு இடம்பெற்றுள்ளது.
ரூபாய் குறியீடு
சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே இந்தியாவில் ரூபாய் அதிகாரப்பூர்வமான பணமாக அறிவிக்கப்பட்டது. இந்திய ரூபாய்க்கென தனி குறியீடு கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இந்த புதிய குறியீட்டை வடிவமைத்தவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், ஐஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பணியாற்றுபவருமான டி. உதயகுமார்.
டாலர், யூரோ, யென், பவுண்ட் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது. அந்த வரிசையில் இந்திய ரூபாயும் சேர்ந்தது. இந்திய ரூபாய்க்கான தனி சின்னத்தை தமிழகத்தைச் சேர்ந்த உதயகுமார் வடிவமைத்த நிலையில் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்து அரசுப் பயன்பாட்டில் சேர்த்தது. ரூபாய்க்கான புதிய குறியீடு 2010 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி அன்று இந்திய அரசால் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
₹ குறியீடு
புதிய குறியீடு, தேவநாகரி எழுத்தான Ra மற்றும் ரோமன் எழுத்தான R ஆகியவற்றின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. Rs அல்லது INR என்றே இந்திய ரூபாய் குறிப்பிடப்பட்டு வந்த நிலையில், தற்போது '₹' என்ற குறியீட்டால் இந்திய ரூபாய் குறிக்கப்படுகிறது. அதன் மேற்பகுதியில் உள்ள 2 கோடுகள் தேசியக்கொடியையும், சமம் என்ற அடையாளத்தையும் குறிக்கின்றன.
ரூபாய்க்கான குறியீட்டை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போட்டியில், கடைசியாக ஐந்து குறியீடுகளை நிபுணர் குழு தேர்வு செய்தது. அதில் இறுதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த உதயகுமாரின் குறியீடு புதிய குறியீடாகத் தேர்வு பெற்றது. இதற்காக உதயகுமாருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
யார் இந்த உதயகுமார்?
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது தந்தை தர்மலிங்கம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். திமுகவைச் சேர்ந்தவர். தாயார் ஜெயலட்சுமி. இவர்களது சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மரூர். உதயகுமாருக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஓவியத்துக்காக பல பரிசுகள் பெற்றவர்.
சென்னை வளசரவாக்கத்தில் பிளஸ் 2 வரை படித்த உதயகுமார், பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஆர்க் பட்டம் பெற்றார். பி.ஆர்க் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்வு பெற்றார். அதன்பிறகு மும்பை ஐ.ஐ.டி.யில் தொழில் டிசைனிங் பிரிவில் (விஷுவல் கம்யூனிகேஷன்) முதுகலை பட்டம் பெற்றார். அங்கு பி.எச்டி. ஆய்வையும் முடித்து பட்டம் பெற்றார். அதைத்தொடர்ந்து கவுகாத்தி ஐஐடியில் வடிவமைப்பியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.












Click it and Unblock the Notifications