ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை... தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
சென்னை: கொரோனா பரவல் எதிரொலியால் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை என தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Recommended Video

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்;
'' சில வெளிநாடுகளில் கொரோனா நோய் தொற்றானது தற்போது மீண்டும் பரவி வருகின்ற இச்சூழ்நிலையில், நோய் தொற்று தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எனவே உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் வழக்கம் போல் செயல்படும். எனினும் டிசம்பர் 31-ம் தேதி இரவு நடத்தப்படும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது. மேலும், அனைத்து கடற்கரைகளிலும், சாலைகளிலும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என்பதால் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ம் தேதிகளில் பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்''.
பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக அரசுத் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடகாவிலும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் வழக்கமாக ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டை வெகு விமரிசையாக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுபவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை இந்தக் கொண்டாட்டத்தை மையமாக வைத்து பல கோடிகள் வணிகம் நடைபெறும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி என பெருநகரங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளில் திரை நட்சத்திரங்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும்.
இந்நிலையில் இந்தாண்டு அதற்கு அதிரடியாக தடை போட்டுள்ளது தமிழக அரசு.












Click it and Unblock the Notifications