2015-ஐ விட பாதி மழைதான்.. இதைக்கூட கையாள தெரியவில்லை.. தமிழக அரசு மீது ஜெயக்குமார் அட்டாக்
சென்னை: கடந்த 2015 ஆம் ஆண்டை கணக்கில் கொள்ளும்போது சென்னையில் பெய்த மழை பாதி தான்.. ஆனால் இதனைக்கூட சரிவர கையாள தெரியாமல் தான் இந்த திமுக அரசு உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் மக்கள் கடும்சிரமத்திற்கு உள்ளாகினர். தற்போது நெல்லை தூத்துக்குடியில் பெய்த மழையின் காரணமாக அம்மாவட்ட மக்களும் கடும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், வானிலை ஆய்வு மைய அறிவிப்புகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- கடந்த 2015ம் ஆண்டை கணக்கில் கொள்ளும்போது சென்னையில் பெய்த மழை பாதி தான்.. அப்படி இருக்கும் போது 50 சதவீதம் பெய்த இந்த மழையினால் ஏற்பட்ட பாதிப்பினை கூட சரிவர கையாளாத அரசு தான் திமுக. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்காததால் இன்றைக்கும் புறநகரில் சில இடங்களில் தண்ணீர் வடியாமல் இருக்கிறது.
விடியாத ஆட்சியில் தண்ணீரும் வடியல. இப்படி இருக்கும்போது, முழுக்க முழுக்க மக்கள் உடைமைகளை இழந்து, பொருளாதார இழப்புகள், வாழ்வாதாரம் பாதிப்பு என இதையெல்லாம் மறைத்து மக்களிடம் நாங்கள் தான் சிறப்பாக செய்துள்ளோம் என்று கூறுவது 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஜோக்காகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்.
வெள்ள பாதிப்பு மீட்பு நடவடிக்கையில், டிசஸ்டர் மீட்பு நடவடிக்கையில் 2015ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் நடந்த மீட்பு பணி, நிவாரண பணியை தான் ஐஐடி இன்றைக்கும் அதனை ரோல்மாடலாக வைத்துள்ளது என்றால் எங்கள் பணி எப்படி இருந்தது என்று நினைத்து பாருங்கள்.. ஒகி புயல், கஜா புயல் என அந்த சூழ்நிலையில் கூட எல்லாவற்றையும் சமாளித்து மக்களுக்கு நல்லது செய்தோம்.
ஆனால் இப்போது 14ம் தேதி கொடுத்த அறிவிப்பை காற்றி தூக்கி போட்டுவிட்டு முன்னெச்சரிக்க நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல்விட்டதால் தென்மாவட்டங்களில் பல இடங்கள் தீவு போல காட்சியளிப்பதை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள். மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து தான் நிதியை பெற வேண்டும்.

இதேபோல மத்திய அரசும் மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு என்று ஓரவஞ்சனை இல்லாமல் நிதியை கொடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. சென்னையில் மழைநீர் வடிகால் பணியை மேற்கொள்ள 4000 கோடி ஒதுக்கினார்கள். அது முழுவது செலவு செய்ததாக ஒரு அமைச்சர் கூறினார். பின்னர் பாதி தான் செலவு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள்.. 4000 செலவு செய்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை.
இப்படி மோசமான நிர்வாகம் செய்துகொண்டிருக்கும் நிலையில், இப்போதாவது கும்பகர்ண தூக்கத்தில் இருந்து இந்த விடியா அரசு விழித்துக்கொண்டு தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து போராடி பெற்றிருக்க வேண்டும். 38 அமைச்சர்கள் இருக்கிறார்கள். டெல்லி சென்று பிரதமரை போய் பாருங்கள்.. மத்திய அமைச்சர்களை போய் பாருங்க.. இதையெல்லாம் செய்யாம இங்கே இருந்துகொண்டே சும்மா கடிதம் மட்டும் எழுதிவிட்டு நிதி வேண்டும் என்றால் எப்படி.. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.











Click it and Unblock the Notifications