மோடியின் சப்பாத்தி அரசியல்?.. பஞ்சாபில் மாற்றம் வருமா? தராசு ஷ்யாம் அப்டேட்!
சென்னை: பாஜகவுக்கு 200 தொகுதிகள் வரைதான் கிடைக்கும் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைத்தளங்கள் முழுக்க மோடி பஞ்சாப் உடையில் சப்பாத்தி உருட்டும் புகைப்படங்கள்தான் வைரலாகி வருகின்றன. பலரும் அதை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

வாரணாசியில் கங்கையில் வழிபாடு, அடுத்து பஞ்சாபில் சப்பாத்தி உருட்டி வழிபாடு எனப் போகும் மாநிலங்களில் எல்லாம் பக்தி பரவசத்தில் மூழ்கி வருகிறார் பிரதமர் மோடி.
கடந்த தேர்தலில் அவர் இவை எல்லாம் பழைய ஃபார்முலாதான். 2019இல் கேதார்நாத் குகைக்குள் தியானத்தில் ஈடுபட்டார். இந்த முறை ஒவ்வொரு மாநிலமாக வழிபாட்டை நடத்தி வருகிறார்.
ஆக, பாஜகவின் பலம் என்பது கோயில்களில் பிரார்த்தனை செய்வதில் தான் உள்ளது என மோடி பலமாக நம்புகிறார்.
ஆனால், இதற்கு மாறாகப் பிரச்சார களத்தில் 'மோடிக்கே கியாரண்டி' என்று பேசுகிறார். ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவு முடிவுகளும் பாஜகவுக்கு ஆதரவாக இல்லை என்றே சொல்லப்பட்டு வருகிறது.
4 கட்ட தேர்தல் முடிந்த பிறகு 300 இடங்களுக்கு மேல் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெறும். பாஜக 200 சீட்டுகளைத் தாண்டாது' என்கிறார் மம்தா.'மோடியின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது' எனத் தேஜஸ்வி யாதவ் சொல்கிறார்.
வலிமை பெறும் மோடிக்கு எதிராக பிரச்சாரங்கள்:
தேஜஸ்வி யாதவ் தனித்துவமான பிரச்சாரத்தைக் கட்டமைத்திருக்கிறார். அவரது பிரச்சாரக் கூட்டங்களில் பேசுவதைவிட அதிகமான வீடியோக்களை திரையிடுகிறார். மோடிக்கு எதிரான ஆதாரங்களை வெளியிட்டு மக்களுக்குப் புரியும்படி விளக்கம் அளித்து வருகிறார்.
இந்த யுக்தி பாமர மக்களிடம் நன்றாக எடுபட்டுள்ளது. பீகாரில் 40 தொகுதிகள் உள்ளன. உபியில் 80 தொகுதிகள். மொத்தம் 120. இதில் பாஜக கடந்த 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை அதில் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகப் பீகாரில் பாஜக பலம் இழிந்து வருகிறது. அது நன்றாகவே தெரிகிறது எனத் தேர்தல் வியூகர்கள் சொல்கிறார்கள்.
பஞ்சாப் சப்பாத்தி அரசியல் எடுபடுமா?
மோடியின் சப்பாத்தி உருட்டும் புகைப்படங்கள் எந்தளவுக்குப் பஞ்சாப் அரசியலில் தாக்கம் செலுத்தும். அங்கே விவசாயிகள் போராட்டம் உச்சத்தில் உள்ளது. அதை மாற்ற இந்த சப்பாத்தி அரசியல் உதவுமா? என்பது பற்றி 'தராசு' ஷ்யாம் பல்வேறு விளக்கங்களை வைத்துள்ளார்.

அவர் மோடியின் சப்பாத்தி அரசியல் பற்றிப் பேசுகையில் "பஞ்சாபில் பாஜக 4வது இடத்தில்தான் இருக்கிறது. பஞ்சாபியர்களின் கட்சி எனச் சொன்னால் சிரோன்மணி அகாலி தளம் தான். ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணியில் இந்தக் கட்சி இருந்தது. ஆனால், இந்த முறை கூட்டணி இல்லை. விவசாயிகள் போராட்டத்தில் பாஜக அரசின் அடக்குமுறைதான் கூட்டணி முறிவுக்குக் காரணம்.
கிட்டத்தட்ட 600 விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிரைப் பலி கொடுத்திருக்கிறார்கள். ஆகவே சீக்கியர்கள் மத்தியில் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. எனவே சீக்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அகாலிதளம் கூட்டணி வைத்துக் கொள்ளத் தயாராக இல்லை.
பஞ்சாபில் காங்கிரஸ் தனித்து போட்டிப் போடுகிறது. அதைப்போலவே ஆம் ஆத்மியும் தனித்துத்தான் களம் காண்கிறது. அதனால், பாஜகவுடன் அகாலிதளம் கூட்டணி வைத்திருந்தால், பல தொகுதிகளில் நல்ல வாக்குகளை வாங்க முடியும். இருந்தும் கூட்டணியே வேண்டாம் என்ற முடிவை அகாலிதளம் எடுத்துள்ளது.
எனவே என்னதான் மோடி சீக்கிய உடையில் உருண்டு புரண்டாடும் பஞ்சாப் மக்களிடம் அது எடுபடாது. 'பராசக்தி' படத்தில், 'பக்தி பகல் வேஷமாகிவிடக் கூடாது' என்று வசனம் வரும். அதுதான் ஞாபகம் வருகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய ஷ்யாம், மோடி எப்படி இடஒதுக்கீடு பற்றி தவறான பிரச்சாரத்தைச் செய்து வருகிறார் என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கத் தொடங்கினார்.
இடஒதுக்கீடு பற்றி ஷ்யாம் பேசும் போது,"இந்தியாவிலேயே ஜாதிவாரியா கணக்கெடுப்பை நடத்திக் காட்டிய முன்னோடி மாநிலம் பீகார். அதற்கு விதைப் போட்டவர் நிதிஷ்குமார். அவர் 'இந்தியா' கூட்டணியை உருவாக்குவதில் முதன்மையாக இருந்தவர். பின்னர் பாஜக அவரை வளைத்துப் போட்டுவிட்டது.
கை நழுவும் இந்தி பேசும் மாநிலங்கள்:
இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கமே, மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம். அதற்காகத்தான் நிதீஷ் அதைச் செய்தார். ஆனால், இன்று பாஜக இந்த சர்வே பற்றி தவறாகப் பேசி வருகிறது. மோடி என்ன சொல்கிறார்? இந்துக்களின் இடங்களைப் பிடுங்கி முஸ்லிம்களுக்குக் கொடுத்து விடுவார்கள் என்று பேசுகிறார்.
இது தவறான வாதம். ஏனென்றால், மதரீதியாக இடஒதுக்கீட்டை கொடுக்கவே முடியாது. அரசியலமைப்புச் சட்டம் அதை அனுமதிக்காது. அரசியலமைப்புச் சட்டம் முதன்முதலாக எழுதப்பட்ட போது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடே கிடையாது. பழங்குடி மற்றும் பட்டியலின மக்களுக்கு மட்டும் தான் இடஒதுக்கீடு தந்தது.
ஆனால், இதற்கு மாறாக மோடி பேசுகிறார். அப்படிப் பார்த்தால் பாஜக இந்த10 ஆண்டுகள் ஆட்சியில் இந்துக்களுக்குச் செய்தது என்ன? ஒன்றுமே இல்லை. ராமர் கோயில் கட்டினார்கள். அதுகூட முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை. அவசர அவசரமாகத் திறந்தார்கள். ஆகவேதான் பூரி சங்கராச்சாரியார் போன்றவர்கள் அதை எதிர்த்தார்கள்.
பாஜக குஜராத், மபி, உபி, ராஜஸ்தான், டெல்லி என இந்தி பேசும் மக்கள் அதிகம் நிறைந்த பல மாநிலங்களில் பலமாகக் கடந்த தேர்தலிலிருந்தது. ஒட்டுமொத்தமாக 200 தொகுதிகள் மேல் இவை வரும். கடந்த முறை இவற்றில் 90% சீட்டுகளை பாஜக வென்றது. இந்த முறை அதற்கு வாய்ப்பு இல்லை.

அமித்ஷா ஒவ்வொரு மாநிலத்தில் எத்தனை இடங்களை பாஜக வெற்றி பெறும் என்று ஒரு பட்டியல் போட்டுப் பேசியுள்ளார். அதில் மேற்கு வங்கத்தில் 35 இடங்களை வெற்றி பெறுவோம் என்று சொல்லி இருக்கிறார்.
பாஜக மேற்கு வங்கத்தில் அந்தளவுக்கு வலிமையாக இல்லை என்பதே உண்மை. இதைப்போல அவரது பட்டியலில் பல தவறான ஊகங்கள் உள்ளன. அதைப் பல மாநிலத் தலைவர்கள் மறுத்துப் பேசி உள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமினில் வெளியே வந்த பிறகு டெல்லியில் 1 சீட்டு கூட பாஜக வராது என்றே சொல்கிறார்கள். அதை எல்லாம் வைத்துத்தான் மம்தா அப்படிச் சொல்லி இருக்கிறார்" என்கிறார்












Click it and Unblock the Notifications