வாரணாசிக்கு சென்ற அன்புமணி; ஜி.கே.வாசன்! மிஸ் ஆன ஓபிஎஸ்,டிடிவி! திட்டமிட்ட புறக்கணிப்பா?
சென்னை: மோடி வேட்புமனுத்தாக்கல் நிகழ்ச்சியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் பங்கேற்காதது சில சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
கடந்த 14 ஆம் தேதி பிரதமர் மோடி வாரணாசியில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதற்கு முன்னதாக அவர் கங்கை ஆற்றில் வழிபாடு நடத்தினார். அங்கேயே கரையோரமாக பல ஊடகங்களுக்கு அவர் பிரத்யேக பேட்டிகளை அளித்தார்.
கங்கை வழிபாடு குறித்து மோடி அவரது எக்ஸ் தளத்தில், "கங்கை மாதாவின் பாதத்தை வணங்கிவிட்டு இன்று எனது நாளை தொடங்குகிறேன். நாட்டிலுள்ள அனைத்து பூர்வீக மக்களும் மகிழ்ச்சியும் செழிப்பும் ஆரோக்கியமாக இருக்க நான் பிரார்த்தனை செய்தேன்" என்று கூறிருந்தார்.
இந்த வழிபாட்டிற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பூசாரிகள் ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து தலா ஒருவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
கங்கையை சுத்தப்படுத்த 20,000 கோடி:
இந்தக் கங்கை ஆற்றை சுத்தப்படுத்த 'நமாமி கங்கே' என்ற திட்டத்தை மோடி தனது ஆட்சியில் தொடங்கினார். அதற்காக 2019-2020 வரை 20,000 கோடி ரூபாய் செலவழிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்பின்னர் அதற்காக பணிகள் தொடங்கப்பட்டன.
கங்கை ஒரு ஜீவநதி. நாட்டில் 40% க்கும் அதிகமான மக்கள் இந்தக் கங்கை நதியை ஒட்டிய பகுதிகளில் வசித்து வருகின்றனர். நதி சுத்தமானால் நாடும் வளமாகும் என்று நம்பிக்கை தரப்பட்டது.

அதற்காக கங்கைக் கரைகளில் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்பட்டன. மாசு அடைந்த நீரை இந்த ஆலை சுத்தம் செய்து ஆற்றில் மீண்டும் கலக்க செய்யும். ஆனால், திட்டமிட்டது போல இந்தத் திட்டம் வெற்றியடையவில்லை.
காரணம், கங்கைக்கு நீர் இமயமலைகளிலிருந்து வருகிறது. அதாவது கோடைக் காலத்தில் கூட பனிமலைகள் உருகி வழிவதால் கங்கையில் வெள்ளப்பெருக்கு இருக்கும் அளவுக்கு நீர் வரும். இந்த ஆற்றை சுத்தப்படுத்த கால்வாய்கள் வெட்டி ப்ளாண்ட் அமைக்கப்பட்டதால் நீரின் பாதை திசை திருப்பப்பட்டு விட்டது.
ஆகையால் நீர்வரத்து குறைந்துவிட்டது. கோடைக் காலங்களில் வரும் வெள்ளப்பெருக்கால் தானாகவே கங்கை தூய்மையாகிவிடும். அதுதான் இயற்கை. அதற்கு மாறாக போட்ட மோடியின் திட்டம் தோல்வியை அடைந்தது.
இந்த ஆற்றில்தான் இப்போது மோடி வழிபாடு நடத்தினார். அங்கே பயங்கரமான துர்நாற்றம் வீசுவதால் சூழ்ந்து நின்ற மக்கள் அனைவரும் மூக்கைப் பிடித்தபடி காட்சி தந்தனர்.

மோடி வேட்புமனுத்தாக்கல்:
அடுத்து மோடி காசிக்குச் சென்றார். அது குறித்து மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "காசியில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் கலந்துகொண்டது எனக்குப் பெருமை அளிக்கிறது. இனி வரும் காலங்களில் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று கூறியுள்ளார்.
14 ஆம் தேதி வாரணாசி தொகுதியில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
மோடி மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பேரணியாக நடந்துச் சென்றனர். பிறகு மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவரும் மட்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக தேர்தல் அதிகாரியைச் சென்று சந்தித்தனர். மற்ற அனைவரும் வெளியே காத்திருந்தனர்.

மோடியைப் பாராட்டிய அன்புமணி:
இந்தப் பேரணியில் மோடியுடன் கூட்டணிக் கட்சித்தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே, ஜி.கே.வாசன்,அன்புமணி,சந்திரபாபு நாயுடு என ஏராளமானவர்கள் சென்றனர்.
மோடி மனுத்தாக்கல் முடிந்த பிறகு ஊடகங்களை சந்தித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி, "நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். மோடி 5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார். அவர் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக வருவார்.
எங்கள் கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும். இது உறுதி. இது மாபெரும் வெற்றியாக இருக்கும். இந்தியா வல்லரசாக பிரதமர் மோடியின் தலைமையில் மலரும். உலகில் 3ஆவது பெரிய பொருளாதார நாடாக விரைவில் நம் நாடு மாறும்" என்று பேசினார்.
அடுத்து பேசிய ஜி.கே.வாசன், "பிரதமர் மோடியின் வேட்பு மனுத்தாக்கலுக்காக கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்திருந்தார்கள். ஆகவே வந்துள்ளோம். இது தமிழ்நாட்டுக்குப் பெருமை. ராமேஸ்வரத்திலிருந்து வாரணாசி வந்து பிரதமருடன் வேட்பு மனுத்தாக்கல் நிகழ்வில் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
குறிப்பாக நாட்டின் வளர்ச்சி, நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் தரும் தலைவர் பிரதமர் மோடி என்பது மீண்டும் இந்தத் தேர்தலில் மூலம் இந்திய மக்கள் உறுதிப்படுத்துவார்கள்" என்று பேட்டி அளித்தார்.
இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், இந்த மனுத்தாக்கல் நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. அதைப்போன்று டிடிவி தினகரன் கூட பங்கேற்கவில்லை.
இந்த இருவர்களுக்கு அழைப்பு வழங்கப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. அன்புமணி, ஜி.ஜே.வாசன் எனக் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டிருக்கும்போது இந்த இருவர் மட்டும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளனாரா என்று ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.
இதைப்போலவே மோடி, தமிழ்நாட்டுக்கு வந்த போது நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஓபிஎஸ் அழைக்கப்படவில்லை. அது ஒரு சர்ச்சையாக மாறியது. மீண்டும் அதேபோல் ஒரு விசயம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications