ஆளுநர் ரவி அரை வேக்காட்டுத்தனமாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்! தமிழக காங்கிரஸ் பாய்ச்சல்!
சென்னை: ஆளுநர் ரவி அரை வேக்காட்டுத்தனமாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு பற்றி ஆளுநர் ரவி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைக் கூறியிருப்பதாக சாடியிருக்கிறார் அழகிரி.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பரபரப்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது;

ஆர்.என். ரவி
தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதல் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு எதிராக வரம்புகளை மீறி தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருகிறார்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் செயல்பாடுகளுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடுவதைத் தொடர்ந்து செய்து வருகிறார். நேற்று சென்னை சாஸ்திரி பவனில் பேசிய அவர், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புத்துறை மற்றும் விவசாயத் துறைகள் புறக்கணிக்கப்பட்டதால் நாடு பெரும் அவமானத்தைச் சந்தித்ததாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைக் கூறியிருக்கிறார்.

ஜவஹர்லால் நேரு
இதன்மூலம் பிரதமர் ஜவஹர்லால் நேருவை இழிவுபடுத்தியதோடு, அவரது வாரிசாகக் கருதப்பட்ட லால்பகதூர் சாஸ்திரியையும் அவர் அவமானப்படுத்தியிருக்கிறார். 1956-57 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை 92 கோடியிலிருந்து 1963-64 ல் ரூபாய் 867 கோடியாக உயர்ந்தது. சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்த்தால் தான் வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்த முடியும் என்று நேரு நம்பினார். நேருவின் தலைமையில் 17 ஆண்டுகளில் இந்திய ராணுவ படைவீரர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்திலிருந்து 50 லட்சத்து 50 ஆயிரமாக விரிவடைந்தது.

சீன ஆக்கிரமிப்பு
கடற்படை, விமானப்படைகளுக்கு இக்கால கட்டத்தில் தான் வலு சேர்க்கப்பட்டது. இத்தகைய வலுவான கட்டமைப்புகளை பாதுகாப்புத்துறையில் ஏற்படுத்தியவர் பண்டித நேரு. ஆனால், தற்போது இந்தியாவின் பிரதமராக இருக்கிற நரேந்திர மோடி ஆட்சியில் எல்லைப் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதலுக்குப் பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இந்திய எல்லைப் பகுதிகளின் 4000 சதுர கி.மீ. உள்ளது.

18 முறை சந்தித்து பேச்சு
இந்நிலையில், சீன அதிபரை இந்திய பிரதமர் 18 முறை சந்தித்துப் பேசியிருக்கிறார். ஆனால், இந்தியப் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தவோ, வெளியேற்றவோ முடியவில்லை. இதன்மூலம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. ஆக, சுதந்திர இந்தியாவில் இதுவரை காணாத அளவிற்கு நமது எல்லையில் சீன ஆக்கிரமிப்பும், வர்த்தக படையெடுப்பும் நிகழ்ந்திருப்பதை விட மிகப்பெரிய அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது.

அரைவேக்காட்டுத் தனம்
எனவே, ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் பண்டித நேரு அவர்களைப் பற்றியோ, லால் பகதூர் சாஸ்திரியைப் பற்றியோ முழுமையாக அறிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத் தனமாக அவசர கோலத்தில் ஆதாரமற்ற அவதூறுகளைக் கூறுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இத்தகைய அவதூறுப் பேச்சுகளைத் தொடருவாரேயானால், அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கிறேன்.












Click it and Unblock the Notifications