தமிழகத்தில் 4 சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு! எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்!
சென்னை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் நான்கில் இன்று முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 78 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு ஒரு முறை 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி ஏப்ரல் மாதம் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை, திருச்சி மாவட்டம் சமயபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
கார், ஜீப் போன்றவை ஒரு முறை பயணிப்பதற்கான கட்டணத்தில் மாற்றம் இல்லை. இரு முறை பயணிப்பதற்கான கட்டணத்தில் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணத்தில் ரூ 70 உயர்த்தப்பட்டுள்ளது.
பல அச்சு வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 15 ரூபாயும் இரு முறை பயணிக்க 20 ரூபாயும் மாதாந்திர கட்டணத்தில் 395 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ள சுங்கச் சாவடிகளிலும் விரைவில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு எந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என்கிற விவரங்கள் தெரியவில்லை.
சுங்கக் கட்டண உயர்வால் தனியார் வாகனங்களின் வாடகை உயர்த்தப்படும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரக் கூடும். இதனால்தான் சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications