நாளை முக்கியம்.. பாமகவின் டூவீலர் பேரணியை அனுமதிக்கனும்.. இல்லாவிட்டால்.. போலீசை கண்டித்த ராமதாஸ்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகத்தில் நாளை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட உள்ளது. இதற்கு பல இடங்களில் போலீசார் அனுமதி மறுத்துள்ளதற்கு ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இன்னொரு முக்கிய விஷயத்தை போலீசுக்கு கோரிக்கையாக வைத்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணியை பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு சென்று கட்சி தலைவர்களுடன் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக பாமக சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. பாமக தொண்டர்களை புத்துணர்வு பெற வைக்கும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் பாமகவின் எழுச்சியையும், உற்சாகத்தையும் காட்டும் வகையிலும் இதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள் பேரணியை தமிழகத்தில் நடத்த பாமக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். நாளை மோட்டார் சைக்கிள் பேரணி என்பது நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே தான் பல இடங்களில் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ள தொடர் செயல்திட்டத்தின்படி, நாளை அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் அளவில் இரு சக்கர ஊர்திப் பேரணிகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி பேரணி நடத்த பாட்டாளி மக்கள் கட்சியினர் தயாராக உள்ள நிலையில், பல இடங்களில் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பதாக கூறப்படுகிறது. காவல்துறையின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.
பாட்டாளி மக்கள் கட்சியினரை ஒருங்கிணைக்கும் நோக்குடனும், கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு தெரிவிக்கும் நோக்குடனும் தான் இரு சக்கர ஊர்தி பேரணிகள் நடத்தப்படுகின்றன. அமைதியாகவும், ஒழுங்கமைவுடனும், பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமலும் பேரணியை நடத்த வேண்டும் என்று பா.ம.கவினருக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பிறருக்கு பாதிப்பு இல்லாத வகையில் இரு சக்கர ஊர்தி நடத்தும் உரிமை அரசியல் கட்சிகளுக்கு உண்டு. அதை மதித்து பா.ம.க.வினர் நடத்தும் இருசக்கர ஊர்தி பேரணிகளுக்கு நாளை காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும். ஒருவேளை நாளை இல்லாவிட்டால் இன்னொரு நாளில் நடத்த காவல்துறை அனுமதிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications