பஸ் எங்கே வருதுன்னு ஈசியாக தெரிஞ்சிக்கலாம்.. மெட்ரோ ஸ்டைலில் சென்னை பேருந்து நிறுத்தங்கள்.. அடடே செம
சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ளது போன்று, பஸ் எப்போது வரும்? எந்த பஸ் வருகிறது? எத்தனை நிமிடத்தில் பஸ் வரும்? என்பது உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறும் வகையில் சென்னையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் பலகைகள் வைக்கும் திட்டத்தை போக்குவரத்து துறை தொடங்கியுள்ளது.
சென்னையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 3,500 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 35 லட்சம் பயணிகள் இந்த பஸ் சேவைகளை பயன்படுத்துகின்றனர்.

பயணிகளின் போக்குவரத்து சேவைக்கு பெரிதும் உதவியாக இருப்பது பஸ் சேவைகளே. இதனால் பஸ் சேவைகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து துறையும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது பேருந்து நிலையத்தில் டிஜிட்டல் போர்டுகளை பொருத்த போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதாவது பேருந்து நிறுத்தங்களில், பேருந்து வரக்கூடிய வருகை நேரம், வழித்தடம், எத்தனை நிமிடங்களில் அடுத்த பஸ் வரும் என்பது உள்ளிட்ட தகவல்கள் இருக்கக்கூடிய டிஜிட்டல் பலகைகள் வைப்பதற்கான நடவடிக்கையில் போக்குவரத்து துறை இறங்கியுள்ளது. சோதனை முறையில் சென்னையில் அண்ணாசாலை, கோடம்பாக்கம், எழும்பூர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பஸ் நிறுத்தங்களில் இந்த டிஜிட்டல் போர்டுகள் பொருத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் சோதனை முயற்சியாக முதற்கட்டமாக 532 பேருந்து நிறுத்தங்களில் இந்த டிஜிட்டல் போர்டுகள் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த டிஜிட்டல் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
அதாவது அடுத்த பஸ் எப்போது வரும் என்றும் எத்தனை நிமிடத்தில் இந்த பேருந்து நிலையத்தை அடையும் என்ற தகவலும், பஸ்சின் வழித்தட நம்பர் மற்றும் எந்த பேருந்து வருகின்றது போன்ற தகவல்கள் இடம்பெற்று இருக்கிறது. இதன் மூலமாக பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் அடுத்த பஸ் எப்போது வரும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம்.
பேருந்தில் இருக்கின்ற ஜிபிஎஸ் கருவியுடன் இந்த டிஜிட்டல் பலகை கனெக்ட் செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை பல்லவன் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து இந்த சேவையானது கண்காணிக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி உதவியின் கீழ் 136 கோடி ரூபாய் மதிப்பில் இந்த திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
24 மணி நேரமும் இந்த டிஜிட்டல் பலகையானது செயல்படும் வகையில் தான் சோதனை முயற்சியாக பொருத்தப்பட்டுள்ளன. பயணிகளின் வரவேற்பை அடுத்து இதனை கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு கொண்டு செல்லவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications