“நான் எப்பங்க அப்படி சொன்னேன்” - விஜய் குறித்த கேள்வியால் பதறிய டிடிவி தினகரன்
தஞ்சாவூர்: சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ளது. ஆட்சியை தக்கவைக்க திமுகவும், ஆட்சியை பிடிக்க அதிமுக கூட்டணியும் முட்டி மோதி வருகிறார்கள். இதுதவிர விஜய் அரசியல் இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் வெளியேறிவிட்டனர். இந்நிலையில் செய்தியாளர்கள் விஜய் குறித்து எழுப்பிய ஒரு கேள்விக்கு டிடிவி தினகரன் பதறி போய் பதில் சொல்லியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் பரபரக்க தொடங்கிவிட்டது. திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. அதேநேரத்தில் அதிமுக - பாஜக கூட்டணியில் தற்போதுவரை சில கட்சிகள் மட்டுமே உள்ளன. அந்த கூட்டணியில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக தினகரன் விலகிவிட்டனர். ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி ஆகியோரும் ஆக்டிவாக இல்லை.

தினகரன் - தவெக
தேமுதிக, பாமகவின் நிலைப்பாடு உறுதியாக வெளியிடவில்லை. தமாகா, புதிய நீதி கட்சி, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே அங்கம் வகிக்கின்றன. தவெக தலைவர் விஜய் கூட்டணியில் பங்கு என்று சொல்லியிருக்கிறார். இதனால் தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் தவெகவுடன் கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "அமமுகவின் நிலைப்பாட்டை பலமுறை கூறிவிட்டேன். திரும்பியும் அரைத்த மாவை அரைக்க முடியாது. எல்லோரும் எதிர்பார்க்கிறபடி உறுதியாக, இந்தமுறை அமமுக வெற்றி பெறும். அமமுக இடம்பெறுகிற கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். அதை ஆணவத்திலோ, அகங்காரத்திலோ சொல்லவில்லை." என்றார்.
பதறிய டிடிவி
அப்போது செய்தியாளர் ஒருவர், "ஜெயலலிதா வழியில் விஜய் பயணிக்கிறார் என்று சொல்லியுள்ளீர்களே" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதறிய தினகரன், "நான் எங்கே அப்படி சொன்னேன். நான் எல்லாம் அப்படி சொல்லவில்லை. இது என்ன டுபாகூராக இருக்கிறது. உங்களை போல ஒரு செய்தியாளர் ஜெயலலிதா பாணியில் விஜய் பயணிப்பதாக கேட்டார். ஜெயலலிதா பாணியை கடைபிடிப்பது எங்களுக்கு பெருமை தானே என்று தான் கூறினேன்.
நீங்களாக ஒன்றை உருவாக்காதீர்கள். எல்லா கட்சிகளும் அவர்களின் வாக்கு வங்கி அதிகரித்துவிட்டது என்று தான் சொல்வார்கள். அப்படித்தான் பாஜகவும் சொல்கிறது. நானும் கூட தான் அமமுக வெற்றி முத்திரை பதிக்கும், நாங்கள் இடம்பெறும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளேன். அதன் அர்த்தத்தை நீங்கள் மே மாதம் புரிந்து கொள்வீர்கள். மீண்டும் சொல்கிறேன் நாங்கள் அங்கம் வகிக்கிற கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்.
பழனிசாமி நோ
அமமுக பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட்டோம். விஜய் வருகையால் 2026 தேர்தலில் என்ன மாற்றம் நிகழும் என்று அரசியல் ஆருடம் சொல்கிற அளவுக்கு நான் ஞானி கிடையாது. ஊடகவியலாளர்களும், அரசியல் வல்லுநர்களும் தான் அதை சொல்ல வேண்டும். நான் அதைப்பற்றி சொல்ல முடியாது.
75 வருட கட்சிக்கும், 50 வருடக் கட்சிக்கும் இணையாக கட்டமைப்பை கொண்ட கட்சியாக அமமுக உருவாகியுள்ளது. அதை வருகிற தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பொறுத்திருந்து பாருங்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications