கூட்டணியின்றி தடுமாறும் விஜய்.. சென்னையில் நாளை களமிறங்கும் தவெக பிரசார குழு.. பின்னணி இதுதான்
சென்னை: தவெக சார்பில் தேர்தல் பிரசார குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் சென்னையில் இருந்து நாளை முதல் பணியை தொடங்க உள்ளனர். அதன்படி தேர்தல் பிரசார குழு உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. தன்னுடன் கூட்டணிக்கு வந்தால் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தருவோம் என்று விஜய் அறிவித்தார். ஆனால் தற்போது வரை தவெக உடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்கவில்லை.

காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வரை அந்த கட்சி திமுக கூட்டணியிலேயே உள்ளது. அதேபோல் டிடிவி தினகரனின் அமமுக விஜயுடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில் ஐக்கியமாகி உள்ளார்.
கூட்டணியின்றி தவிக்கும் தவெக
இதனால் தவெக தனியாக உள்ளது. எந்த கட்சிகளும் கூட்டணி அமைக்காத பட்சத்தில் தவெக தனியாக களமிறங்க தயாராகி வருகிறது. இதனை விஜயுன் மாநில, மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் சூசகமாக அறிவித்துள்ளார். தனியாக களமிறங்கும்போது தவெகவினர் மிகவும் தீவிரமாக செயல்பட வேண்டும். அப்போது தான் தேர்தலில் வெற்றி பெற முடியும்.
தேர்தல் பிரசார குழு
இதனை தவெக அறிந்து வைத்துள்ளது. இந்நிலையில் தான் கடந்த 16ம் தேதி தவெக சார்பில் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசார பணிகளை மேற்கொள்ள தேர்தல் பிரசார குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், பார்த்திபன், ராஜ்குமார், விஜய் தாமு, செல்வம், பிச்சை ரத்தினம் கரிகாலன், செரவு மைதின் என்ற நியாஸ், கேத்ரின் பாண்டின் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தொகுதி வாரியாக பிரசாரம்
இந்த குழுவினர் 234 தொகுதிகளிலும் ஆலோசனை கூட்டங்கள், பிரசார கூட்டங்கள் உள்ளிட்வற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் தான் தவெக பிரசார குழு சென்னையில் இருந்து பணியை தொடங்க உள்ளது. இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னையில் தொடக்கம்
அதில், கூறப்பட்டுள்ளதாவது: ‛‛தலைமை நிலையச் செயலக அறிவிப்பு நாளை (28.01.2026, புதன்கிழமை) மாலை 4 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. சந்திரா கன்வென்ஷன் சென்டரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொள்ளும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
— TVK Party HQ (@TVKPartyHQ) January 27, 2026
நாளை (28.01.2026, புதன்கிழமை) மாலை 4 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. சந்திரா கன்வென்ஷன் சென்டரில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் குழு உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொள்ளும் ஒருங்கிணைந்த சென்னை…
இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே அழைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட கழகச் செயல்வீரர்கள் மட்டும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications