சென்னை திநகரில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது! குவிந்த நிர்வாகிகளால் பரபரப்பு!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையை கண்டித்து விஜய் தன் கைப்பட எழுதிய கடிதத்தை தடையை மீறி விநியோகம் செய்ததால் கைது செய்யப்பட்ட பெண் நிர்வாகிகளை சந்திக்க சென்ற கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் போலீஸார் திநகரில் வைத்து கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23 ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வலியுறுத்தியும் பாஜக , அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தியிருந்தன. இந்த நிலையில் நடிகர் விஜய் இந்த சம்பவத்தை கண்டித்து ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டிருந்தார்.
எனினும் அவர் இன்று காலை தன் கைப்பட ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கள எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம். எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம். இவ்வாறு அந்த கடிதத்தில் விஜய் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து இந்த கடிதத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகள் நகலெடுத்து கல்லூரிகள் மாணவிகள், பொதுமக்களிடம் வழங்கி வந்தனர். அது போல் சென்னையில் வி.ஆர். மால், எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழங்கி வந்தனர்.
அப்போது அங்கு வந்த போலீஸார் இது போல் வழங்கக் கூடாது என தடுத்தனர். ஆனால் தடுத்தும் அதை மீறி அவர்கள் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். அந்த வகையில் பூக்கடையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு நோட்டீஸ் வழங்கிய பெண் நிர்வாகிகளை போலீஸார் கைது செய்து திநகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
இதனிடையே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, அண்ணா பல்கலைக்கழக விவகாரம், பெஞ்சல் புயலுக்கு நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். அவருடன் புஸ்ஸி ஆனந்தும் சென்றிருந்தார். இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு பிறகு விஜய் , அவருடைய வீட்டுக்கு சென்றதும், நேராக பெண்களை கைது செய்து வைத்திருக்கும் மண்டபத்திற்கு வந்து போலீஸாரிடம் , அவர்களை விடுவிக்குமாறு புஸ்ஸி ஆனந்த் கேட்டார். அப்போது போலீஸார் மறுத்தனர். இதைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்தையும் போலீஸார் கைது செய்து அங்கு வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications