விஜய் ஏன் இன்னும் கரூர் போகல? இதுதான் காரணம்.. தவெக ஆதரவாளர் காமேஷ் கொடுத்த விளக்கம்!
சென்னை: கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக கூட்டத்தின் போது 41 பேர் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இன்னும் விஜய் கரூர் செல்லாதது விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில், விஜய் கரூரு செல்ல தாமதம் ஆவது ஏன் என்பது குறித்து நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் தவெக ஆதரவாளர் காமேஷ்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி, அரசியல் களத்தில் முழுமூச்சாக இறங்கிவிட்டார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுகிறது. இதையொட்டி கடந்த சில வாரங்களாக மக்கள் சந்திப்புகளை நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், தவெக மீதும், விஜய் மீதும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தரப்பினர் நேரில் பார்க்கச் செல்லாதது விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், தவெக ஆதரவாளர் காமேஷ், நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
தவெக ஆதரவாளர் காமேஷ் பேசுகையில், "விஜய் கரூருக்கு போகாததற்கு பல காரணங்கள் இருக்கின்றன. விஜய் அப்போதே சென்றிருந்தால் 41 பேர் 410 பேர் ஆகியிருக்கும். அவர் கரூர் மாவட்டத்துக்கு செல்வதற்கு கரூர் மாவட்ட எஸ்.பி அனுமதிக்கவில்லை. அனுமதி கேட்ட கடிதத்துக்கு பதில் வரவில்லை. டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்த பிறகு சில நடைமுறைகளை பின்பற்றுமாறு கூறினார்கள். இப்போது அந்த நடைமுறை முடிந்துவிட்டது.
கரூர் ஒரு மண்டபத்தில் விஜய், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கும் முயற்சி நடக்கிறது. அதற்கு கொஞ்சம் தாமதம் ஆகும். உடனடியாக வந்து சென்றால் அது இன்னும் குழப்பங்களை உருவாக்கும், 16 நாள் ஆகட்டும் எனக் காத்திருந்தோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களோடு தான் நிற்கவேண்டும், வேறு எதையும் செய்ய வேண்டாம் என்பதுதான் எங்களின் முடிவு. இனி விரைவிலேயே விஜய் அவர்களைச் சந்திப்பார்.
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் அதிகாலை 5 மணி வரை கரூர் மாவட்டத்தில் தான் இருந்தார்கள். இப்போது இங்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என அவர்களை வரவிடாமல் தடுத்தது காவல்துறை தான். இது நீதிமன்றத்தில் நிரூபணம் ஆகும். பல மாவட்ட செயலாளர்கள் கரூரில் இருந்தார்கள். யார் அங்கு தவெக கொடியுடன் வந்தாலும் அவர்களை தாக்கும் திட்டங்கள் நடந்தன.
சிபிஐ வழக்குகள் 99% தோல்வி எனச் சொல்வார்கள். ஆனால் இது வெறுமனே சிபிஐ விசாரணை மட்டுமல்ல, சிபிஐக்கு மேலே 2 ஐ.ஜி அந்தஸ்து கொண்ட 2 அதிகாரிகள், அதுவும் தமிழ்நாடு அல்லாத 2 ஐ.ஜிக்கள் இருக்கிறார்கள். இதைத் தாண்டி ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி உள்ளிட்டோர் இந்த விசாரணையை மேற்பார்வை செய்வார்கள். அதனை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும். இந்த விசாரணை ஒரு நேர்கோட்டில் நடக்கும். இந்த நடைமுறையைத் தான் நாங்கள் சண்டை போட்டுக் கேட்டோம். உச்ச நீதிமன்றத்தின் மூலம் எல்லாமே வெளியில் வரும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications