"சார்" விவகாரம்.. விஜய் முன் நிற்கும் டாஸ்க்.. ஜென் Z வாக்காளர்கள் பாதிப்பு.. பத்திரிகையாளர் மணி!
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் காரணமாக தவெக தலைவர் விஜய் முன்பாக மிகப்பெரிய டாஸ்க் இருப்பதாக பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். ஏனென்றால் தவெக கட்சிக்கு இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆதரவு இருந்தாலும், அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெற வைக்க வேண்டிய பொறுப்பும் விஜய்க்கு இருப்பதாக அறிவுறுத்தியுள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலை இலக்காக வைத்து தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு வருகிறது. கரூர் விவகாரத்திற்கு பின் 38 நாட்கள் கழித்து, தவெக தலைவர் விஜய் பொதுவெளிக்கு வந்துள்ளார். தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், மீண்டும் திமுக மற்றும் தவெக இடையில் மட்டுமே போட்டி என்பதை தெளிவாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விஜய் கட்சிக்கு சுமார் 20 சதவிகிதம் வரை வாக்குகள் கிடைக்கும் என்று சில கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, விசிக என்று அத்தனை கட்சிகளில் இருந்தும் ஒரு பிரிவு விஜய்க்கு ஆதரவாக வாக்களிக்கலாம். அதேபோல் பெண்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருவதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தவெக சிறப்பு பொதுக்குழு தொடர்பாக பத்திரிகையாளர் மணி பேசுகையில், 2026 சட்டசபைத் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடுவது நீண்ட நாட்களுக்கு பயன் கொடுக்கும். அதேபோல் தவெக தனியாக நிற்பதால், அதிமுகவுக்கு கூடுதல் பலவீனம். யானை தனது தலையில் மண்ணை அள்ளி போட்டதற்கு சமமானது. அதிமுகவுக்கு குறைந்தபட்சம் 20 சதவிகித வாக்குகள் கையில் உள்ளது.
அதேபோல் தவெக இதுவரை எந்த செயல் திட்டத்தையும் பேச தொடங்கவில்லை. மாற்று என்று சொல்லிக் கொள்ளும் தவெக, மாற்று திட்டத்தை சொல்ல வேண்டும். அதேபோல் புதிதாக ஒரு கட்சி உருவாகும் போது அவர்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கலாம். ஆனால் தவெகவில் எந்த அனுபவமும் இல்லை. சட்டசபைத் தேர்தலில் தவெக தனித்து நின்றால், திமுக மற்றும் அதிமுக இரண்டையும் எதிர்கொள்ள வேண்டும்.
234 தொகுதிகளிலும் தவெகவின் வேட்பு மனுத்தாக்கலை ஏற்பார்களா என்றே தெரியாது. அதற்கே விஜய் மிகப்பெரிய அளவில் பணியாற்ற வேண்டும். இவை எல்லாவற்றையும் விட, விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய சவால் "SIR". ஏனென்றால் விஜய்யின் வாக்கு வங்கி என்பது GEN Z என்று சொல்லக் கூடியவர்கள். 2004க்கு பின் பிறந்தவர்கள்.
அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விஜய் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். SIRஐ எதிர்க்கிறோம் என்று வாய்சவடால் விட்டுவிட்டு பனையூரில் போய் உட்காரக் கூடாது. GEN Z வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் கொண்டு வர வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கப் போகிறது. ஒரு ஆண்டு செய்ய வேண்டிய பணியை, ஒரு மாதத்தில் செய்கிறார்கள்.
தேர்தல் நாளன்று தான் மக்கள் கவலைப்படுவார்கள். அதேபோல் எதிர்க்கட்சிகள் என்ன செய்யும் என்றால், எதிர் தரப்பு வாக்குகளை நீக்கிவிடுவார்கள். திமுகவின் வாக்குகளை அதிமுகவும், அதிமுக வாக்குகளை திமுகவும் அடிப்பார்கள். இது தமிழ்நாடு முழுவதும் நடக்கும். இதனை தவெக எதிர்கொள்ளும் வகையில் அனுபவம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications