அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.. விஜய்யால் எம்ஜிஆர் ஆக முடியாது.. ஜெயக்குமார் கொடுத்த பதிலடி!
சென்னை: விஜய்யால் ஒருபோதும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். எம்ஜிஆர் பெயரை விஜய் உச்சரிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று கூறிய ஜெயக்குமார், முதலில் அத்தைக்கு மீசை முளைத்த பின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பேசிக் கொள்ளலாம் என்றும் விமர்சித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தவெக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தவெக தலைவர் விஜய் மக்களை சந்தித்தார். இதில் விஜய் பேசுகையில், நாம் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதைப் பற்றி கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன்.

வந்தால் என்ன.. கட்டாயம் ஆட்சிக்கு வருவோம்.. மக்கள் நம்மை வர வைப்பார்கள்.. எல்லோருக்கும் நிரந்தரமான வீடு.. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மோட்டார் சைக்கிள்.. அதற்கான வசதி வாய்ப்பை உருவாக்கும் அளவிற்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதற்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கேற்றவாறு கல்வியில் பாடத்திட்டத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும்.
இவற்றை எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்பதை நமது தேர்தல் அறிக்கையில் விளக்கமாக தெரிவிப்போம். மற்றவர்களை போல் சும்மா பேசிவிட்டு ஏமாற்றும் வேலை எல்லாம் இங்கு கிடையாது. நாம் சும்மா எதைய்டும் சொல்ல மாட்டோம். சொன்னால் அதனை செய்யாமல் விட மாட்டோம்.. அது மக்களுக்கு நன்றாக தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் எம்ஜிஆர் மற்றும் அண்ணா ஆகியோரை விஜய் தொடர்ந்து புகழ்ந்து வருகிறார். இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. ஒரே சூரியன், ஒரே சந்திரன் போல் ஒரே எம்ஜிஆர் தான். அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. அதேபோல் எம்ஜிஆர் இல்லாமல் அரசியல் கிடையாது.
அந்த வகையில் விஜய் எம்ஜிஆர் பெயரை உச்சரித்திருக்கிறார். அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எம்ஜிஆர் கட்சியை உருவாக்கினார். அதனால் அடுத்த ஆண்டு அதிமுக ஆட்சி மலரும். எங்கள் தலைவரின் பெயரை விஜய் உச்சரிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியே.. விஜய் தேர்தல் வாக்குறுதிகள் கொடுப்பது இருக்கட்டும்..
அதற்கு முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும்.. பிறகு பார்க்கலாம். விஜய் திமுகவை மனதில் வைத்துதான் பேசி இருக்கிறார்.. அதனால் விஜய்யை தொட்டவர்களுக்கு தான் வருத்தம் என்று தெரிவித்துள்ளார். அதிமுகவின் நிறுவனரான எம்ஜிஆர் அடையாளத்தை ஏற்கனவே பாஜகவுக்கு விட்டுக் கொடுத்திருந்த நிலையில், தற்போது விஜய் பயன்படுத்துவதற்கும் ஜெயக்குமார் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications