2 நாளில்.. திமுகவிற்கு போன 2 ஹாப்பி நியூஸ்! உற்சாகத்தில் 2 அமைச்சர்கள்! திரும்பி பார்த்த பாஜக+அதிமுக
சென்னை: 2 திமுக அமைச்சர்களுக்கு எதிராக இருந்த வழக்குகளில் அடுத்தடுத்து வந்த உத்தரவுகள் திமுக தரப்பை குஷிக்கு உள்ளாக்கி இருக்கிறதாம். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்று சொல்லும் அளவிற்கும் ஆளும் திமுக அமைச்சர்கள் இருவரும் நடவடிக்கைகளில் சட்ட ரீதியாக நிவாரணம் பெற்றுள்ளனர்.
அதிமுக மாஜி அமைச்சர்கள் பலர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மாஜி அமைச்சர் சி விஜயபாஸ்கர் மீது தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகள் கூட உள்ளன. அதேபோல் மாஜி அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று பலர் மீது வழக்குகள் உள்ளன.
இன்னொரு பக்கம் அதிமுக காலத்தில் திமுகவின் மூத்த நிர்வாகிகள் பலர் மீதும் இதேபோல் வழக்குகள் பதியப்பட்டு. சொத்துக்குவிப்பு வழக்கு, முறைகேடு வழக்கு என்று சில வழக்குகள் திமுகவினர் மீது அதிமுக ஆட்சி காலத்தில் பதியப்பட்டது.

அதிமுக - திமுக
முக்கியமாக திமுகவின் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது முக்கியமான சில வழக்குகள் பதியப்பட்டன. தற்போது இரண்டு பேருமே முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சர்களாக இருக்கும் நிலையில், அவர்கள் மீதான வழக்குகள் அதிக கவனம் பெற்றன. இந்த நிலையில்தான் அந்த வழக்குகளில் தற்போது தீர்ப்புகள் வந்துள்ளன. தமிழ்நாடு அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் கடந்த 14ம் தேதி தீர்ப்பளித்தது. அவர் திமுக ஆட்சி காலத்தில் அதிக சொத்து குவித்ததாக புகார் வைக்கப்பட்டு உள்ளது.

சொத்து குவிப்பு
1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்த போது கீதா ஜீவனின் அப்பா என்.பெரியசாமி சொத்து குவித்ததாக புகார் வைக்கப்பட்டது. அவர் வருமானத்திற்கு அதிகமாக முறைகேடாக ரூ2.31 லட்சம் ரூபாய் சொத்து குவித்தார் புகார் வைக்கப்பட்டது. இந்த வருமானத்திற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டது. இதில் 6வது குற்றஞ்சாட்டப்பட்ட நபராக அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த அவரின் மகள் கீதா ஜீவன் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில்தான் தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

அமைச்சர்
கீதா ஜீவன் சமூகநலத்துறை அமைச்சரும், தற்போதைய சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஆக உள்ளார். இவர் தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ ஆவார். இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் கீதா ஜீவன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது. அவரது சகோதரரான தூத்துக்குடி மேயர் ஜெகன் மீதான வழக்கும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக அவரின் குடும்பத்தினர் 5 பேரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இதனால் கீதா ஜீவனின் அமைச்சர் பதவி தப்பி இருக்கிறது.

தப்பித்தார்
கீதா ஜீவனுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அவருடைய எம்.எல்.ஏ.பதவி காலியாகும். அதாவது 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் அவரின் பதிவு காலி ஆகும். இதனால் சட்டப்படி அவரது தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிமுகவினர் இந்த வழக்கை தீவிரமாக எதிர்பார்த்து இருந்த நிலையில்தான் கீதா ஜீவன் மீதான வழக்கு நீக்கப்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கிலும் நேற்று முக்கியமான உத்தரவு வந்தது. கடந்த 2001-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

வழக்கு
இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக 2020ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது. வருமானத்திற்கு அதிகமாக அனிதா ராதாகிருஷ்ணன் 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384 ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து, அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது. இது அமைச்சருக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்தது. எதிர்கட்சிகளை பாஜக வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை வைத்து முடக்க பார்ப்பதாக புகார் வைக்கப்பட்டது.

உத்தரவு
சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்துவிட்டதால், அந்த சட்டத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என வாதிடப்பட்டது.

குட்நியூஸ்
இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி, மறு உத்தரவு வரும்வரை அமலாக்கத் துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்தவழக்கில் தான் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத் துறை விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படி 2 திமுக அமைச்சர்களுக்கு எதிராக இருந்த வழக்குகளில் அடுத்தடுத்து வந்த உத்தரவுகள் திமுக தரப்பை குஷிக்கு உள்ளாக்கி இருக்கிறதாம். இந்த வழக்கில் இவர்களுக்கு எதிராக தீர்ப்பு வரும் என்று அதிமுக, பாஜகவினர் தீவிரமாக கவனித்து வந்த நிலையில்தான் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்று சொல்லும் அளவிற்கும் ஆளும் திமுக அமைச்சர்கள் இருவரும் நடவடிக்கைகளில் சட்ட ரீதியாக நிவாரணம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications