எவ்வளவு மரியாதை கொடுத்தாலும்.. நிதி கொடுக்க மறுக்கிறார்கள்.. பட்ஜெட் குறித்து உதயநிதி சரமாரி தாக்கு
சென்னை: மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள நிலையில், இது குறித்து காட்டமான விமர்சனங்களைத் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி முன்வைத்துள்ளார்.
இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வது இது 6ஆவது முறையாகும்.

கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் டிஜிட்டல் முறையிலேயே பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தனது பட்ஜெட் உரையில் அவர் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார்.
லோக்சபா தேர்தல்: இந்தாண்டு ஏப்ரல்- மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறும். புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு தான் இந்தாண்டிற்கான முழு பட்ஜெட்டை ஜூன் மாதம் தாக்கல் செய்யும். எனவே, பொதுவாகத் தேர்தல் ஆண்டுகளில் அதற்கு முன் ஏப்ரல் வரையிலான காலகட்டத்திற்கான இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே மத்திய அரசில் உள்ளவர்கள் தாக்கல் செய்வார்கள்.
அதன்படி இந்தாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மொத்தம் 58 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்த நிர்மலா சீதாராமன் அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இருப்பினும், பெரிதும் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு உள்ளிட்ட அறிவிப்புகள் இதில் இல்லை. அதேநேரம் மத்திய அரசின் இந்த இடைக்கால பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வருகிறது.
அமைச்சர் உதயநிதி: மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழ்நாட்டு மக்கள் இளித்தவாயர்களா? என்று காட்டமாக விமர்சித்திருந்தார். இதற்கிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பட்ஜெட் குறித்து சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இது குறித்து தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில், "ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அல்வா கிண்டியுள்ளனர்: இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க - பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த - மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும் தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை.
இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை, இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி" என்று அவர் தனகு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications