ஐபிஎல் பார்க்க சேப்பாக்கம் குழந்தைகளைஅழைத்துப் போன உதயநிதி! ஆடிப்போன முன்னாள் அமைச்சர்கள்
சென்னை: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விளையாட்டுத் துறை அதிக அளவில் சுறுசுறுப்பாகச் செயல்பட தொடங்கி இருக்கிறது.
ஏதோ ஒருவகையான விளையாட்டுக்கு மட்டும் மதிப்பளிக்காமல் அனைத்து விளையாட்டுகளையும் சமமாக வளர்ச்சிபெற வைக்க வேண்டும் என்ற முனைப்பு அவரது செயல்பாட்டினை வைத்துப் புரிந்துகொள்ள முடிகிறது.
இதற்குச் சரியான உதாரணமாக உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற 'மிஸ் கூவாகம்' போட்டியைச் சொல்லலாம்.

அந்தப் போட்டியை சில தினங்களுக்கு முன்னால் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் தொடங்கிவைத்தார். அப்போது அங்கே பேசிய அவர், "திருநங்கைகளும் தொழில்வாய்ப்பைப் பெற வேண்டும் என்பதற்காகக் கிட்டத்தட்ட 50 பேருக்கு ஓட்டுநர் உரிமத்தை வழங்க நடவடிக்கை எடுத்தோம்.
இதனால் பல திருநங்கைகள் ஓட்டுநராக வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். விளையாட்டுத் துறை அமைச்சராக - துறைசார்ந்து திருநங்கைகளுக்கென தனிப் போட்டிகள் நடத்துவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உள்ளேன்" என்று உறுதிமொழி அளித்துள்ளார்.
கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதுதான், தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கென தனியாக நலவாரியம் அமைக்கப்பட்டது. அதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக இப்போது அவர்களின் விளையாட்டு உரிமைக்கும் முக்கியத்துவம் தரக் கூடிய ஓர் அறிவிப்பை அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே விளையாட்டு வீரர்களுக்காக ஊக்கத்தொகையை நிலுவை வைக்காமல் உடனுக்குடன் வழங்கினார்.
குறிப்பாக 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற விழாவில் தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 190 வீரர்ககளுக்கு 4.85 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார்.
அதுவே விளையாட்டுத் துறைக்கு மிக மகிழ்ச்சியான மருந்தாக அமைந்தது என்கிறார்கள் விளையாட்டு விமர்சகர்கள்.

கடந்த மார்ச் மாதம்கூட 160 வீரர்களுக்கு மொத்தம் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார். மேலும் 8 விளையாட்டு வீரர்களுக்கும், 76 பயிற்றுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 8 பயிற்றுநர்களுக்கு பணிநியமன ஆணைகளைத் தலைமைச்செயலகத்தில் வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது தமிழ்நாட்டில் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக ' Tamil Nadu Champions Foundation' என்ற புதிய அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.'
இதன் மூலம் நம் விளையாட்டு வீரர்களை சர்வதேச தரத்திற்குத் தயார்செய்வதற்கு கார்பரேட் நிறுவனங்களிடம் சிஎஸ்ஆர் (Corporate social responsibility) நிதியைத் திரட்டுவதற்காக அந்நிறுவனங்களின் அதிகாரிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சந்தித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றபோது, "பதவியாகக் கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றுவேன்" என்று குறிப்பிட்டார். அந்த வார்த்தையைக் காப்பாற்றும்வகையில் தொடர்ந்து விளையாட்டுத்துறையை மேம்படுத்த பல முன்னெடுப்புகளைச் செய்துகொண்டே இருக்கிறார்.
ஒடிசா மாநிலம், ரூர்கேலாவில் நடைபெற உள்ள 13ஆவது ஹாக்கி இந்தியா நேஷனல் சாம்பியன்சிப் ஆண்கள் மற்றும் பெண்கள் சப்-ஜூனியர் பிரிவு போட்டியில் பங்குபெற உள்ள தமிழக வீரர்களுக்கு, இரண்டு நாள்களுக்கு முன்னர், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உபகரணங்களைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
தமிழ்நாடு செஸ் விளையாட்டில் எப்படித் தரமான வீரர்களை உருவாக்கி உலகத்தரத்தில் முன்வரிசையில் உள்ளதோ அதே அளவுக்கு ஒரு காலத்தில் ஹாக்கியிலிருந்தது. அதன் முகமாக ஹாக்கி பாஸ்கர் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள்.

அந்தப் பொற்காலத்தை மீண்டும் தமிழ்நாடு என்றாவது எட்டிவிடாதா என்கிற ஏக்கம் அந்தத் துறைசார்ந்த ஆர்வலர்களிடம் வெகுகாலமாக இருந்துவருகிறது. அது நிறைவேறுவதற்கு இந்த முயற்சிகள் நிச்சயமாக பலனளிக்கும் என்கிறார் வடசென்னையைச் சேர்ந்த இளைஞர் கிருஷ்ண குமார்.
ஒரு பக்கம் அமைச்சராக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்துவரும் உதயநிதி, இன்னொரு பக்கம் தனது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவதிலும் முதல் நபராக இருந்துவருகிறார்.
தன் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்கச் செய்திருக்கிறார், உதயநிதி. அதேபோல் நடமாடும் கலைஞர் நூலகத்தை உருவாக்கி இல்லம் தோறும் நூல்களைக் கொண்டுபோய்ச் சேர்த்து வருகிறார்.

இப்படி சட்டமன்ற உறுப்பினராக தரமான சம்பவங்களை தன் தொகுதிக்குள் செய்துவரும் உதயநிதி, விளையாட்டுத் துறை அமைச்சராக, ஒரு ஹைலைட்டான செயலை செய்துகாட்டி இருக்கிறார். இவரின் தொகுதிக்குள்தான் சேப்பாக்கம் ஸ்டேடியம் உள்ளது. இப்போது அங்கு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
"ஐபிஎல் போட்டிக்கு ஒரு டிக்கெட் வாங்கிக் கொடுங்கள்" என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களே இவரிடம் கோரிக்கை வைக்க... அவையில் கலகலப்பான நிகழ்வாக மாறிப்போனது, குறிப்பிடத்தக்கது.
இப்போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள 115ஆவது வட்டத்தைச் சேர்ந்த- கிரிக்கெட்டில் ஆர்வம்கொண்ட 150 சிறுவர், சிறுமிகளை ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க அழைத்துச்சென்றுள்ளார்.

முன்னாள் அமைச்சர்களே, டிக்கெட் கேட்கும் அளவுக்கு தள்ளுமுள்ளு நடந்துவரும் ஸ்டேடியத்திற்குள், 115 சாமானிய குடும்பத்துப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்றிருப்பது அற்புதமான மாற்றம் இல்லாமல் வேறு என்ன?
இது குறித்து உதயநிதி, தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்த முன்னெடுப்பால் விளையாட்டின் மீதான அவர்களின் ஈடுபாடு மேலும் அதிகரிக்க வாழ்த்துகள்" என்று கருத்திட்டுள்ளார்.
அவர் சொல்வதைப் போல, இந்த ஆர்வம் மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் அதிகரித்தால், 234 தொகுதி ஏழைக் குழந்தைகளும் மிக விரைவில் சேப்பாக்கம் மைதானத்திற்குள் ஒரு நாள் அடி எடுத்து வைப்பார்கள்.












Click it and Unblock the Notifications