10 ஆண்டுகால போராட்டம்.. பட்டென்று முடித்து வைத்த உதயநிதி.. அப்படி என்ன பிரச்சினை?
சென்னை: கடந்த 10 ஆண்டுகளாகத் தீர்க்க முடியாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த பிரச்சினைக்குத் தனது ஒரே பேச்சின் மூலம் தீர்வை உண்டாக்கிக் கொடுத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
அப்படி என்ன பிரச்சினை?
மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைகளை முறையிடுவதற்கு ஒரு அதிகாரி இல்லை என்பதுதான் அது. 'இதைத் தீர்த்து வைக்க கடந்த 10 ஆண்டுகால ஆட்சியால் முடியவில்லை என்பதுதான் வேதனை' என்கிறார் தீபக்நாதன்.

"பொதுவாகவே மாற்றுத்திறனாளி என்றால் ஒரு கழிவிரக்க பார்வையோடுதான் பலரும் பல ஆண்டுகளாகப் பார்த்துவருகிறார்கள். அதனால் என்ன பிரச்சினை என்று பலருக்கும் கேள்வி எழலாம்.
இப்படி கழிவிரக்க பார்வையோடு மட்டுமே எங்களது பிரச்சினைகளை அணுகுவதால், சட்டரீதியாக எங்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகள் கூட முறையாகக் கிடைப்பதில்லை" என்று தொடங்கும் போதே 'நச்' என்று நங்கூரத்தை இறக்குவதைப் போலக் கூர்மையாகப் பேசத்தொடங்குகிறார் பேராசிரியர் தீபக்நாதன்.

இவர் ஒரு மாற்றுத்திறனாளி. 'டிசம்பர் 3' இயக்கத்தில் தலைவராக இருந்துவருகிறார். அதன்மூலம் மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்.
தீபக் சமீபத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்தார். எதற்காக? என்ன கோரிக்கை? என்பது பற்றி எல்லாம் அவரே மிகத் தெளிவாகப் பேசினார்.
"எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை விசாரிப்பதற்கு என தனி ஆணையர் நியமிக்கப்பட வேண்டும் என்று, மாற்றுத்திறனாளிகள் சட்டவிதிகளில் இருக்கிறது. ஆனால், கடந்த ஆட்சியின்போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் தலைவர் பதவிக்கும் மாற்றுத்திறனாளிகளின் உரிமை ஆணையருக்கும் சேர்த்து ஒரே நபரை நியமித்துவிட்டார்கள். அதனால் என்ன என்று நினைக்கலாம். என்ன வித்தியாசம் என விளக்குகிறேன்.

எங்களுக்காக உள்ள நலத்துறையில் உள்ள தலைவர் என்பவர் எங்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தக்கூடியவர்.
ஆணையர் என்பவர் அத்திட்டத்தில் என்ன பாதிப்பு இருக்கிறது என்பதைப் பற்றிய குறைகளைக் கேட்டறிந்து சரிசெய்யக் கூடியவர்.
இந்த இரண்டு பதவிகளிலும் ஒருவரையே நியமித்துவிட்டதால், தலைவரிடமே சென்று புகாரைக் கொடுக்க முடிவதில்லை.

அப்படிக் கொடுத்தால், அது அவருக்கு எதிராக இருக்கும் பட்சத்தில், அவர் அதைக் கிடப்பில் போட்டுவிடுவார். இந்த நடைமுறை சிக்கலைப் பற்றிப் பல வருடங்களாக நாங்கள் முறையிட்டு வந்தோம்.
கடந்த கால ஆட்சியில் யாரும் இதற்குச் செவிசாய்க்கவே இல்லை. நாங்கள் எவ்வளவோ போராடிப் பார்த்தோம். ஒரு மாற்றமும் நடக்கவே இல்லை.
திமுக ஆட்சி வந்தபிறகு குறிப்பாக, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்றத்தில் தனது உரையின்போது மிக விளக்கமாகப் பேசினார். நான் முன்பே குறிப்பிட்ட ஆணையர் நியமனம் ஏன் தேவை என்பதை மிகத் தெளிவாகப் புரியவைத்தார். அத்துடன் இல்லாமல், முதல்வர் ஸ்டாலினிடம் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இவரது பேச்சு எங்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்தது. இவர் நமது குறைகளைப் புரிந்துகொள்வார் எனத் தெரியவந்தது" என்று தங்கள் பக்க நியாயத்தைச் சுட்டிக்காட்டினார் தீபக்நாதன்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது சட்டமன்ற உரையின்போது தீபக்நாதனின் நம்பிக்கையை நன்றாக உணர முடிந்தது. அவருடைய உரையில், "மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் தங்களின் குறைகள் நிறைவேறவில்லை என்றால், அவர்கள் ஆணையரிடம் முறையிடுவது வழக்கம். ஆனால், தற்போது துறையின் இயக்குநரே ஆணையராகவும் பணியில் இருப்பதால், அங்குச் சென்று முறையிடு செய்ய மாற்றுத்திறனாளிகள் தயங்குவதாகத் தெரியவருகிறது. ஆகையால், மாற்றுத்திறனாளிகள் ஆணையத்திற்கு என்று தனியாக ஒருவரை ஆணையராக நியமிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுப் பேசி இருந்தார்.
இந்தக் கோரிக்கை மிகமிக நுட்பமானது. பரவலாகப் பலரும் இதனை ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதுவதில்லை. ஆனால், அமைச்சர் உதயநிதி, இந்த மைக்ரோ லெவல் பிரச்சினையை அடையாளம் கண்டு பேசி இருந்தார். அதை உணர்ந்ததால்தான், தீபக்நாதன் போன்ற மாற்றுத்திறனாளிகளின் நலனின் அக்கறை கொண்டவர்கள் அவரைத் தேடிச் சென்று வாழ்த்தி இருக்கிறார்கள்.

இப்போது உதயநிதியின் கோரிக்கையை ஏற்று அரசு நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அது என்ன?
அது குறித்தும் விளக்கமாக தீபக்நாதனிடம் தொடர்ந்து பேசினோம்.
"சட்டமன்றத்தில் பேசியதுடன் அவரது வேலை முடிந்துவிடவில்லை. அதற்கு அடுத்தகட்ட முயற்சிகளையும் அமைச்சர் உதயநிதி செய்திருக்கிறார். நான் சொல்வதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதன்முறையாக ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளின் குறைகளைப் பற்றி விசாரிப்பதற்கு, மனித உரிமை ஆணையருக்கு இணையாக அதிகாரம் கொண்ட ஒரு இயக்குநர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது எவ்வளவு பெரிய விஷயம். இதற்காகத் தனி ஐஏஎஸ் அதிகாரியை நியமித்திருக்கிறது இந்த அரசு" என்கிறார் தீபக்.
சட்டசபையில் உதயநிதி வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக அப்போதே பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "இதற்கான அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, நானும் இந்த அரசும் உடனடியாக நடவடிக்கை எடுப்போம்" என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு இப்போது புதிய ஆணையர் பொறுப்பில் அமர்த்தியதன் மூலம் நிஜமாகி இருக்கிறது.

இந்த ஆணையரை நியமித்ததற்கான அரசாணையையும் அரசு உடனடியாக வெளியிட்டுள்ளது. இவை எல்லாம் மின்னல் வேக நடவடிக்கையாகச் செய்யப்பட்டுள்ளது.
எங்களது குறைகளை நேரடியாகப் போய் சொல்வதற்கு ஒரு அமைச்சர் கிடைத்திருக்கிறார். அவர் எங்களுக்காகச் சட்டசபையில் பேசவும் செய்கிறார்.
சுருக்கமாகச் சொன்னால், செவிசாய்க்கக் கூடிய அரசாக இந்த அரசாங்கம் இருக்கிறது. இந்த 'திராவிட மாடல்' ஆட்சியில் எங்கள் கண்ணீர் துடைக்கப்பட்டிருக்கிறது. அதை நினைத்தால் மனம் நிம்மதி பெருமூச்சு விடுகிறது" என்கிறார் தீபக்நாதன்.












Click it and Unblock the Notifications