தேர்தல் பிரச்சாரத்திலேயே குறி வைக்கப்பட்ட எஸ் பி வேலுமணி.. வைரலாகும் உதயநிதியின் வீடியோ!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திலேயே முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் ஊழல்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் பட்டியலிட்டிருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. இதை பார்க்கும் போது தேர்தல் பிரச்சாரத்திலேயே எஸ் பி வேலுமணி குறி வைக்கப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது.
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ் பி வேலுமணி. இவர் டெண்டர் ஒதுக்கீடு, ஒப்பந்தப் பணிகளில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.
அது போல் அறப்போர் இயக்கமும் சென்னை மாநகராட்சியில் திட்ட பணிகளுக்காக எஸ் பி வேலுமணியால் எத்தனை கோடி ஊழல் செய்யப்பட்டது என்பது குறித்தும் விரிவாக அறிக்கை தயார் செய்யப்பட்டது.

வேலுமணியின் ஊழல்கள்
எஸ் பி வேலுமணியின் ஊழல்கள் அடங்கிய பட்டியலை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் பல ஆதாரங்களுடன் புகார் மனுவை அளித்தார். எனினும் அவரது புகாருக்கு எந்த வித நடவடிக்கையும் ஆளுநர் எடுக்கவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலின்
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் வந்தது. இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சூறாவளி பிரச்சாரம் செய்தனர். அப்போது கோவையில் இவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும்போதெல்லாம் வேலுமணியின் ஊழல்கள் குறித்தும் மக்களுக்கு புள்ளிவிவரங்களுடன் புட்டு புட்டு வைத்து வந்தனர்.

வேலுமணியின் மீது ஊழல்
அந்த வகையில் வேலுமணியின் ஊழல் குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பட்டியலிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அப்போது உதயநிதி பேசுகையில் " இந்த அதிமுக ஆட்சியே ஒரு துயரத்தில்தான் நடக்கிறது. இந்த அமைச்சர் எஸ் பி வேலுமணியால் ப்ளீச்சிங் பவுடர் முதல் மாஸ்க் வரை எல்லாவற்றிலும் ஊழல் நடந்துள்ளது. எஸ் பி வேலுமணியின் ஊழல் பட்டியலை படிக்கிறேன் கேளுங்கள்.

கோவை மாநகராட்சி
சென்னை, கோவை மாநகராட்சிகளில் எஸ் பி வேலுமணியின் பினாமி நிறுவனங்களான கேசிபி என்ஜினியர்ஸ், செந்தில் அன்ட் கோ, வரதன் உள்கட்டமைப்பு, கான்ஸ்டானிக்ஸ் இந்தியா, ஆலயம் அறக்கட்டளை பிரைவேட் லிமிடெட், கான்ஸ்ட்ராமால் குட்ஸ் பிரைவேட் லிமிடெட், இன்விக்டா மெடிடெக் ஆகிய 7 நிறுவனங்கள் மட்டுமே அனைத்து டென்டர்களையும் மாற்றி மாற்றி எடுத்துள்ளன.

எஸ் பி வேலுமணி மீது வழக்கு
அது போல் கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்திற்கு ரூ 595 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட திட்டத்தை சூயஸ் நிறுவனத்திற்கு ரூ 3150 கோடிக்கு ஒப்பந்தம் செய்து ஊழல் செய்திருக்கிறார் எஸ்பி வேலுமணி. 349 டெண்டர்களில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து வேலுமணி மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

998 கோடி ரூபாய் மதிப்பு
கோவையில் 998 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி பணிகளிலும் ஊழல், ரூ 230 கோடி வளர்ச்சி பணி என்ற பெயரில் நொய்யல் ஆற்றை புனரமைப்பதிலும் ஊழல் , தமிழகம் முழுவதும் 1300 ரூபாய் மதிப்புள்ள ஒரு எல்இடி லைட்டுகளை ரூ 6000 என கொள்முதல் செய்து எல்இடி விளக்குகளை பொருத்தமட்டில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. இது போல் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. இதற்கான அத்தனை ஆதாரங்களும் ஸ்டாலினிடம் இருக்கிறது.

விரைவில் ஆட்சி மாற்றம்
விரைவில் ஆட்சி மாற்றம் வரும். இந்த எடப்பாடி பழனிச்சாமி, எஸ் பி வேலுமணி உள்ளிட்ட ஊழல் செய்த அமைச்சர்கள் சிறை செல்வார்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என உதயநிதி பேசினார். இன்றைய தினம் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு நடத்தி வருகிறது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

ஸ்டாலின் சூளுரை
இதே போல் கோவையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் எஸ் பி வேலுமணியின் ஊழல்கள் மீது நானே நடவடிக்கை எடுப்பேன் என மு.க.ஸ்டாலினும் சூளுரைத்திருந்தார். மேலும் எஸ் பி வேலுமணியின் மீது திமுக ஆட்சி அமைந்தவுடன் வழக்கு பாயும் பாயும் பாயும் என ஸ்டாலின் சபதமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications