“எடப்பாடி பழனிசாமி இரட்டை விரலை காட்டுவது ஏன் தெரியுமா?” - உதயநிதி ஸ்டாலின் சொன்ன மேட்டர்!
சென்னை: "ஏற்கனவே 10 தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமிக்கு நாம் தோல்விகளை கொடுத்திருக்கிறோம். இந்த முறை 11வது தோல்வி கிடைக்கப் போவதை குறிக்கவே எடப்பாடி பழனிசாமி இரட்டை விரலைக் காட்டுகிறார்" என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரச்சாரத்தின்போது பேசியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "டெல்லிக்கு தமிழ்நாடு என்றுமே அவுட் ஆஃப் கன்ட்ரோல்தான் என்பதை நிரூபிப்போம். டெல்லி Vs தமிழ்நாடு என்ற உரிமைப் போரில் வெல்வோம் ஒன்றாக... ஏற்கனவே 10 தேர்தல்களில் பழனிசாமிக்கு நாம் தோல்விகளை கொடுத்திருக்கிறோம். இந்த முறை 11வது தோல்வி கிடைக்கப் போவதை குறிக்கவே பழனிசாமி இரட்டை விரலைக் காட்டுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் மேலும் பேசுகையில், "ஐந்து ஆண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். அந்த தைரியத்தில் தான் இந்த முறை வாக்கு கேட்டு வந்துள்ளேன். அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினி திட்டத்தை 2019-ல் அவர்களே நிறுத்திவிட்டனர். ஆனால் முதல்வர், கல்லூரி மாணவர்களுக்கு தான் பயனுள்ளதாக இருக்கும் என்று, அவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணிகளை வழங்கினார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தேர்தலை காட்டி அதிமுக, பாஜக நிறுத்த சதி செய்தது. அதை முறியடித்து ரூ.5,000 கொடுத்தார் முதல்வர். காலை 6.30-க்கு அனுப்பிய பணத்தை, குறைந்தபட்ச இருப்பு இல்லை என்று கூறி மோடி எடுத்துவிடுவார் என்ற பயத்தில் காலை 9 மணிக்கே பெண்கள் எடுத்துவிட்டனர். இந்த முறை 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
முதல்வர் சொல்வது போல் இந்த தேர்தல் தமிழகத்துக்கும், டெல்லிக்குமானது. இதில் டெல்லி அணியை வீழ்த்த வேண்டும். திமுக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. ஆனால், மத்திய அரசு நாம் கேட்ட நிதியை கூட கொடுக்கவில்லை. பட்ஜெட்டில் கூட எந்த திட்டமும் தமிழகத்துக்கு இல்லை. இதனால் நேரடியாக வந்தால் தமிழக மக்கள் விடமாட்டர் என்று, அதிமுக என்ற போர்வையை போர்த்திக் கொண்டு பாஜக வருகிறது. அவர்களை தமிழக மக்கள் அனுமதிக்க கூடாது.
ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமிக்கு 10 தோல்விகளை கொடுத்துள்ளோம். இந்த தேர்தலில் 10 தோல்வி பழனிசாமியை மொத்த தோல்வி பழனிசாமியாக்கி வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்த முறை 11வது தோல்வி கிடைக்கப் போவதை குறிக்கவே பழனிசாமி இரட்டை விரலைக் காட்டுகிறார்" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications