மகளிர் உரிமைத்தொகை பெற அப்பீல் செய்தவர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்ட ஆர்டர்!
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேல்முறையீட்டுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை விரைந்து ஆய்வு செய்து பயனாளிகள் பட்டியலை தயாரிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 வரவு வைக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் அக்டோபர் 14ஆம் தேதியே குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காத குடும்பத் தலைவிகள், தாங்கள் அரசு நிர்ணயித்த தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் அவர்களும் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் 9 லட்சம் குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அதில் தகுதியுள்ளவர்களுக்கு ரூ.1000 கட்டாயமாக வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த பெண்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்வது குறித்து இன்று துணை ஆட்சியர்கள் - சார் ஆட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு சென்னையில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். மேல்முறையீடு செய்துள்ள குடும்பத் தலைவிகளில் பயனாளிகளை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்தில் தகுதியுள்ள ஒரு பயனாளி கூட விடுபட்டு விடக்கூடாது என்பதில் நம் கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 1.06 கோடி மகளிர் இத்திட்டத்தில் பயனடையும் நிலையில், விண்ணப்பம் ஏற்கப்படாதவர்களின் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்திருந்தோம்.
அதன்படி, மேல்முறையீட்டு விண்ணப்பங்களை பரிசீலனை செய்வது தொடர்பாக, துணை ஆட்சியர்கள் - சார் ஆட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்களுக்கு சென்னையில் நடத்தப்பட்ட பயிற்சி முகாமில் பங்கேற்று உரையாற்றினோம். மேல்முறையீட்டுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை விரைந்து ஆய்வு செய்து அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications