காதல் திருமணத்தில் சித்தப்பா, மாமானு குறுக்க வருவாங்க! ஏன்னா எனக்கும் லவ் மேரேஜ்தான்! உதயநிதி கலகல
சென்னை: காதல் திருமணத்தில் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் எனக்கு தெரியும். எனக்கும் காதல் திருமணம் தான். இது அறநிலைத்துறை, அன்பு நிலையத்துறையா? என்று தெரியாத அளவிற்கு காதல் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 இணையர்களுக்கு, ராஜா அண்ணாமலைபுரம் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார்.
திருமணம் செய்து கொண்ட இணையர்களுக்கு பரிசுப் பொருள்கள் மற்றும் 70,000 மதிப்புள்ள சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் சேகர்பாபு வெள்ளி வேல் வழங்கினார்.
193 ஜோடிகளுக்கு திருமணம்
இந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,
முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி அறநிலையத்துறை சார்பில் 32 இணையர்களுக்கு திருமணத்தை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி. சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் 193 இணையர்களுக்கு இன்று திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.
1000 உரிமைத் தொகை
கடந்த மே மாதம் சட்டமன்றத்தில் முதலமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். 1000 இணையர்களுக்கு திருமணத்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்றுடன் அதை நிறைவேற்றியும் விட்டார்.
இணையர்கள்
என் அருகில் இருந்து இணையர்களிடம் ஒருவருக்கொருவர் எப்படித் தெரியும் கேட்டேன், காதல் திருமணம் என்று சொன்னார்கள். காதல் திருமணத்தில் இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் எனக்கு தெரியும். எனக்கும் காதல் திருமணம் தான்.
பெண் ஒப்புக் கொள்ள வேண்டும்
முதலில் பெண் ஒப்புக் கொள்ள வேண்டும், பிறகு அவர்களின் பெற்றோர்களை சமாதானப்படுத்த வேண்டும், பிறகு பெண்ணின் மாமா சித்தப்பா உள்ளிட்டோர் புதுப்புது பிரச்சனைகளுடன் வருவார்கள். அவர்களின் சம்மதத்தை பெற்ற பிறகு, திருமணம் செய்ய வேண்டும்.
அறநிலையத் துறை
இது அறநிலைத்துறை, அன்பு நிலையத்துறையா? என்று தெரியாத அளவிற்கு காதல் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன. மணமகன்களின் பெற்றோரின் பெயருக்கு பின்னால் சாதி பெயர்தான் இருக்கும். ஆனால் இப்போது பெயருக்கு பின்னால் ஜாதி பெயர் இருப்பதில்லை. அவர்கள் பெற்ற பட்டங்களின் பெயர்கள் தான் உள்ளது. திராவிட இயக்க தலைவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர்தான் காரணம்.
மகளிருக்கு பல்வேறு திட்டங்கள்
மகளிருக்கான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஒரு திட்டத்தை எப்படி அழகாக பயன்படுத்த வேண்டும் என்பதை மகளிரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து முதலமைச்சர்களுக்கும் முன்னோடியாக இருக்கக் கூடியவர் தான் நமது முதலமைச்சர். 1.15 கோடி மகளிர்க்கு மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் 40 சதவீதம் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் தான்.
11.1 சதவீதம்
இதுபோன்ற பல திட்டங்கள் தான் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக முன்னோடி மாநிலமாக 11.1 சதவீதத்துடன் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. ஏழை எளிய குழந்தைகள் படிக்க வேண்டும் என்று நாம் கல்லூரிகளை திறந்தால், கோயில் நிதியில் கல்லூரி திறக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி தொடர்ந்து கேட்கிறார். கோயில் நிதியைக் கல்விக்கு பயன்படுத்தக் கூடாது என்று அவர் கூறுகிறார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார்.
கல்விக்கு அறநிலையத் துறை நிதி
ஆனால் நீதிமன்றம் கல்விக்கு அறநிலையத் துறை நிதியைப் பயன்படுத்த அனுமதி வழங்கியது. இன்றைக்கு திருமணங்கள் நடத்துவதற்கு கூட, அறநிலையத்துறை நிதியில் எப்படி திருமணம் நடத்தலாம் என்று அவர் கோபித்துக் கொள்ளக் கூடும், இன்றைக்கு கேள்வி எழுப்பினாலும் எழுப்புவார். அப்படித்தான் எதிர்க்கட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திராவிட மாடலின் சாதனைகள் அவரின் கருணை உறுத்திக் கொண்டிருக்கிறது.
உதயநிதி அறிவுரை
உங்களிடம் கூடப் பிறக்காத அண்ணனாக அறிவுரை சொல்கிறேன், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும் சுயமரியாதையுடனும், எதற்கு விட்டுக் கொடுக்க வேண்டுமோ அதற்கு விட்டுக் கொடுத்தும், விட்டுக் கொடுக்க வேண்டாதவற்றுக்கு விட்டுக் கொடுக்காமலும் நீங்கள் வாழ வேண்டும்.
தமிழ் பெயர்
உங்களுக்கு பிறக்கக் கூடிய குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும். திராவிட மாடல் அரசும் முதலமைச்சரும் போல நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். இவ்வாறு உதயநிதி பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications