ரவுண்டு கட்டிய திமுக.. உதயநிதி ஸ்டாலின் சொன்ன முக்கியமான பாயின்ட்.. விஜய் ரியாக்ஷன்!
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று சட்டசபையில் நடைபெற்ற நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு 144 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றது. ஆனால் இந்த வாக்கெடுப்பைச் சுற்றி ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணி அரசியல் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்ததால், சட்டசபை முழுவதும் பரபரப்பாக காட்சி அளித்தது.
இந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் திமுக சார்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாட்டின் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டவர் தான் விஜய்" என்று நேரடியாக தாக்கி பேசினார். மக்கள் தீர்ப்பால் அதிகாரத்திற்கு வர முடியாததால், அரசியல் கூட்டணி, குதிரை பேரம் மூலம் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

விஜய் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) அரசு சட்டமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டது. இந்த வாக்கெடுப்பில் 144 உறுப்பினர்கள் ஆதரவுடன் தவெக அரசு வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், 22 பேர் எதிர்த்தும், 5 பேர் நடுநிலை வகித்தும் வாக்களித்தனர். இந்த வெற்றி TVK அரசுக்கு தற்காலிக நிம்மதியை அளித்துள்ளது.
வாக்கெடுப்பு முடிந்ததும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அடுத்த கூட்டத்துக்கான தேதியை அறிவிக்காமல் சட்டமன்றத்தை ஒத்திவைத்தார்.
திமுகவின் வெளிநடப்பு
எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்தனர். முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது என்ற முன்பே தெரிவித்திருந்தார், இதற்கு ஏற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தினர்.
திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளிநடப்பு செய்யும் முன்பு பேசிய போது, "தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் - 3.19 கோடி வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட அரசு" என்று TVK அரசை கடுமையாக விமர்சித்தார்.
உதயநிதி ஸ்டாலினின் விமர்சனம்
மேலும், "தூய சக்தி" என்று மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார் உதயநிதி ஸ்டாலின். மேலும் டிடிவி தினகரன் செய்த விமர்சனங்களை முன்வைத்து பேசிய எதிர்கட்சி தலைவர் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொறுப்பை தட்டிக் கழிப்பதாகவும், "sofa அரசியல்" நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
மேலும் "புஷ்பா பட பாணியில் ஆட்சி நடக்கிறது" என்று விமர்சித்த உதயநிதி, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
sofa அரசியல்
மக்கள் தீர்ப்பால் முதல்வர் நாற்காலி கிடைக்காத காரணத்தால் sofa அரசியலை அரங்கேற்றும் தவெக அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கையில்லை என்ற உணர்வே சட்டசபையில் பிரதிபலிக்கிறது என உதயநிதி பேசினார்.
மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், தற்போது அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது, அதில் ஒரு தரப்பு உங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆதரவு தெரிவித்த தலைவரின் வீட்டுக்கு புது சோபா போனது. பின்னாலே முதல்வர் விஜயைும் போகிறார்.
கட்சி மாறுவதற்கு முன்பே முதல்வர் அந்த கட்சிக்கு போகிறது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை..மேலும், "சேஞ்ச், சேஞ்ச் என்று பேசினார்கள். ஆனால் பின்னணியில் பெரிய எக்ஸ்சேஞ்ச் நடந்ததா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.
புஷ்பா பட பாணியில் ஆட்சி
தற்போதைய ஆட்சி நடைமுறைகளை "புஷ்பா பட பாணி ஆட்சி" என உதயநிதி ஸ்டாலின் விவரித்தார். "கூவத்தூரையே மிஞ்சும் அளவுக்கு அரசியல் கூத்து நடக்கிறது" என்று கூறிய அவர், ஆளும் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
தூய்மையான அரசியல் சக்தி என்ற பெயரில் மக்களை ஏமாற்றி தற்போது குதிரை பேர அரசியலில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார். இதனால் தேர்தலில் வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் புதிய அரசு இழந்து வருவதாக அவர் சட்டசபையில் தெரிவித்தார்.
"பெரும்பான்மை மக்களுக்கு இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலிக்கவே வெளிநடப்பு செய்கிறோம்" என்று உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார் உதயநிதி ஸ்டாலின்.
அதிமுகவில் பிளவு
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவிலும் உட்கட்சி முரண்பாடு சட்டமன்றத்திலேயே வெடித்தது. அதிமுக கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், ஒரு தரப்பு TVK அரசுக்கு முழு ஆதரவு தெரிவித்தது. "நாங்கள் பதவிக்கு ஆசைப்படவில்லை. மாநிலத்தின் நிலைத்தன்மைக்காக ஆதரவு அளிக்கிறோம்" என்று அவர் கூறினார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தரப்பு இந்த ஆதரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருடன் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த பிளவு அதிமுகவின் கட்சி இக்கட்டான நிலையில் இருப்பதை காட்டுகிறது.
144 எம்எல்ஏ ஆதரவுடன் விஜய் அரசு வெற்றி
அரசியல் சர்ச்சைகள், குற்றச்சாட்டுகள் மற்றும் வெளிநடப்புகளுக்கு இடையே நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு வெற்றி பெற்றது.
டிவிஷன் வாரியாக நடைபெற்ற வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏக்கள் ஆதரவாகவும், 22 எம்எல்ஏக்கள் எதிராகவும் வாக்களித்தனர். மேலும் 5 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.
இதன் மூலம் சட்டசபையில் தனது பெரும்பான்மையை விஜய் அரசு நிரூபித்துள்ளது. வாக்கெடுப்பு முடிவுகளை அறிவித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், தேதி குறிப்பிடாமல் சட்டசபையை ஒத்திவைத்தார்.
விஜய் ரியாக்ஷன்
உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்வர் விஜய், இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசு... குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு இல்லை! என்று விளக்கம் கொடுத்தார்.
தமிழ்நாடு அரசியல்
ஒரு பக்கம் திமுக கடும் எதிர்ப்பு குரல் எழுப்பி வரும் நிலையில், மற்றொரு பக்கம் அதிமுகவில் வெளிப்பட்டுள்ள உட்கட்சி முரண்பாடுகள் அரசியல் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளன.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது அரசை சட்டப்பூர்வமாக நிலைநிறுத்தியுள்ளதால், அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் மாநில அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமைச்சர்களுக்கு இலாக்கா ஒதுக்கீடு செய்வது, பட்ஜெட் தாக்கல் குறித்து பணிகளை துவங்குவது, வெள்ளை அறிக்கை வெளியிடுவது என பல முக்கிய பணிகளை விஜய் தலைமையிலான தவெக துவங்க உள்ளது.















Click it and Unblock the Notifications