திமுகவில் சாதி.. “யாராக இருந்தாலும் தவறு.. சுய விமர்சனத்தை ஏற்கனும்” -பா.ரஞ்சித்துக்கு உதயநிதி பதில்
சென்னை: மாமன்னன் திரைப்படத்தை பாராட்டி, திமுகவில் சாதிய பாகுபாடு இருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் முன்வைத்த விமர்சனத்துக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யாராக இருந்தாலும் தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் பா.ரஞ்சித், "மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.

உண்மையாகவே தனித்தொகுதி எம்.எல்.ஏக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன்.
உண்மையாகவே பெரும் பாராட்டுக்குரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின். திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார். அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம்.
பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!" என்று அவர் பதிவிட்டு இருந்தார். பா ரஞ்சித்தின் இப்பதிவுக்கு திமுகவினர் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "மாமன்னன்' திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.இரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் கழகம் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது கழகம்.
ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் சமூகநீதி'யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது கழக அரசு. அண்ணா - கலைஞர் வழியில் எங்கள் கழகத் தலைவர் அவர்களும் இப்பணியைத் தொடர்கிறார். பராசக்தி'யில் தொடங்கி மாமன்னன்' வரை கலை வடிவங்களிலும் சமூகநீதி'யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம்.
ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்திற்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டுகால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும்கூட. ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார்-அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். இப்பயணத்தில் கழகம் மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் இரஞ்சித் அவர்களுக்கு நன்றி." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "இயக்குநர் பா.ரஞ்சித்தின் விமர்சனத்திற்கு விளக்கம் அளித்து உள்ளேன். சுய விமர்சனத்தை யாராக இருந்தாலும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். எங்கு நடந்தாலும், தவறு தவறுதான். அந்த தவறை திருத்திக் கொள்ளும் வகையிலேயே பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் எங்களை வளர்த்து உள்ளனர்." என்றார்.












Click it and Unblock the Notifications