நம்ப முடியலை.. செம த்ரில்.. கார் பந்தயத்தை நேரில் ரசித்த 100 மாணவர்கள்!
சென்னை: ஃபார்முலா 4 கார் ரேஸ் போட்டியை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி குழந்தைகள் நேரில் கண்டு ரசித்துள்ளனர். அந்த த்ரில் ஆன அனுபவத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஃபார்முலா 4 கார் பந்தயம் முதன்முறையாக சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இரண்டு நாட்கள் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃபார்முலா 4 சென்னையில் அண்ணா சாலையில் நடைபெற்றதுதான் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்தப் பந்தயத்திற்காக தீவுத் திடல் தொடங்கி பிளாக் ஸ்டாப் ரோடு, அண்ணா சாலை வழியாக வந்து மறுபடியும் தீவுத்திடல் வரை ட்ராக் அமைக்கப்பட்டிருந்தது. கூடவே தடுப்புகள், பாதுகாப்பு டயர்கள், வழிகாட்டும் கருவிகள் என அமைக்கப்பட்டிருந்தன.

தமிழ்நாட்டில் உள்ள பலருக்கும் ஃபார்முலா 4 கார் பந்தயம் என்றால் என்னவென்றே தெரியாது. இந்த பார்முலா 4 கார் பந்தயம் தெற்கு ஆசியாவிலேயே முதன்முறையாக நடத்தப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வசிக்கும் குழந்தைகள் நேரில் காண்பதற்காக ஏற்பாடுகள் செய்து தரப்பட்டிருந்தன. அதைக் காணப் பலர் மிகுந்த ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
அதில் கலந்துகொண்ட மாணவி நிஷா, “நான் முதன்முறையாக இந்த கார் போட்டியை நேரில் பார்க்கிறேன். என் வாழ்க்கையில் இது மிக சுவாரஸ்யமான தருணம்” என்று வியந்துள்ளார். மற்றொரு மாணவர் வழக்கமாக ஐபிஎஸ் போட்டிகளை நேரில் பார்ப்பதற்காக அழைத்து போவார்கள். இந்த முறை ஃபார்முலா 4 ரேஸ் பார்க்க அழைத்து வந்திருக்கிறார்கள். இளம் கல்லூரி மாணவி ஒருவர், சென்னையில் இதுதான் முதல் தடவை இந்த மாதிரி கார் ரேஸ் நடக்கிறது. பார்க்கவே செமயா இருக்கு. சூப்பராக இருக்கிறது என்கிறார். மற்றொரு மாணவி, இதுவரை டிவியில்தான் இந்த மாதிரியான கார் ரேஸ் போட்டிகளைப் பார்த்து இருக்கிறேன். நேரில் ஒரு தடவைகூட பார்த்தது இல்லை. இப்போதுதான் முதன்முதலாக எங்கள் ஏரியா பசங்கள் அனைவருடனும் உட்கார்ந்து பார்க்கிறேன் என்று கண்கள் அகல வியப்பில் பேசுகிறார்.
ஒரு மாணவர் மெட்ராஸ் பாஷையில், 'கார்லாம் செமயா ஓட்னாங்கோ.. ஸ்டெண்ட்லாம் செமயா பண்ணாங்கோ.. பார்க்கவே மெர்சலா இருந்தது என்று தன் உணர்வுகளை அப்படியே நம்மிடம் கடத்துகிறார். இவரைப் போலவே கல்லூரி இளைஞர் தேஜா என்பவர் இந்த மாதிரி ஒருபோட்டி நடக்க போகிறது என செய்தி கேள்விப்பட்டதும் பெருமையாக இருந்ததாகச் சொல்கிறார். வெளிநாடுகளில் மட்டுமே நடைபெறும் என நினைத்து வந்த இந்த கார் போட்டி தமிழ்நாட்டில் அதுவும் அண்ணாசாலையில் நடக்கும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை என்கிறார் இவர் அருகில் நின்றிருந்த மற்றொரு திருவல்லிக்கேணி மாணவி.
இதேபோல் ஒரு சிறுவன் ஆங்கிலத்தில் பொளந்து கட்டி பேசுகிறான். இதைப்போன்ற ஒரு போட்டியை நான் நேரில் பார்க்கிறேன் என்பதையே தன்னால் நம்ப முடியவில்லை. இதை ஏற்பாடு செய்தவர்களை எனக்கு அவ்வளவு பிடித்துள்ளது என்கிறான். இந்தப் போட்டியைக் காணவந்த குழந்தைகள் அனைவருக்கும் இரும்புக் கம்பிகள் தடுப்புகள் அமைக்கப்பட்ட பாதுகாப்பான மேடையிலிருந்து பார்க்கும்படி வசதிகள் செய்து தரப்பட்டன.
இந்தக் குழந்தைகளை அழைத்துச் சென்றது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு தகவலைப் பதிவிட்டுள்ளார். அதில், “இந்தியத் துணைக் கண்டத்தின் விளையாட்டுத்துறை தலைநகராகத் தமிழ்நாட்டை உருவாக்குகிற வகையில், சென்னைத் தீவுத்திடலில் நடைபெறும் #Formula4Chennai Racing On the Street Circuit போட்டி, பல்வேறு தரப்பினரின் பாராட்டையும், வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்தப் போட்டியை நேரில் காண விரும்பிய நம்முடைய #ChepaukTriplicane-ஐ சேர்ந்த 100 மாணவ - மாணவியரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், அதற்கான ஏற்பாட்டினைச் செய்து அழைத்துச் சென்றோம். சீறிவரும் கார்களை அவர்களுடன் அமர்ந்து ரசித்தோம். #Formula4 கார் பந்தயத்தைக் கண்டு மகிழ்ந்த நம் தொகுதி மாணவ - மாணவிகளுக்கு என் அன்பும், வாழ்த்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications