"கொரோனா தடுப்பூசி செலுத்துவதில்.. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது!" யுனிசெஃப் இந்தியா பாராட்டு
சென்னை: கொரோனா வேக்சின் பணிகளில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக யுனிசெஃப் இந்தியா பிரிவின் தலைவர் ஹுயூன் ஹி பான் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகள் சந்தித்த சிக்கல்கள், தரமற்ற கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினகைளைகுக்கு தீர்வு காணத் தமிழக அரசுடன் யூனிசெஃப் இந்தியா இணைந்து பல திட்டங்களை முன்னெடுக்க உள்ளது.
இன்று சென்னை சாஸ்திரி பவனில் செய்தியாளரைச் சந்தித்த யுனிசெஃப் இந்தியா பிரிவின் தலைவர் ஹுயூன் ஹி பான் இது தொடர்பாக பல்வேறு விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்

குழந்தை உரிமை
சென்னை சாஸ்திரி பவனில் இன்று (14.03.2022) அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சமூக நலத்துறை, நீதித்துறை, காவல் துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. இதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். குழந்தைகள் பாதுகாப்புக்குப் பள்ளிக் கல்வித் துறையின் ஈடுபாடும் தொடர்ந்து தேவைப்படுகிறது.

பல்வேறு திட்டங்கள்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் தொந்தரவு போன்றவை குறித்த செய்திகளை வெளியிடுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். மதிய உணவுத் திட்டம் போன்றவற்றால் தமிழ்நாடு எழுத்தறிவு அதிகம் உள்ள மாநிலமாகத் திகழ்கிறது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குத் திறன் மேம்பாடு அளிக்கும் திட்டங்கள் யுனிசெஃப் உதவியுடன் கல்வித்துறையால் செயல்படுத்தப்படுகிறது.

கல்வி அளிப்பதில் சிக்கல்
கோவிட் பெருந்தொற்று குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனைச் சரிசெய்ய இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தனித்துவமான ஏற்பாடுகளைச் செய்வது அவசியமாகும். இல்லையென்றால் குழந்தைகள் இடையே கற்றலில் பெரிய அளவில் இடைவெளி வரக்கூடும். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரைச் சந்தித்து யுனிசெஃபின் அடுத்த கட்டத் திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளோம்.

தமிழ்நாடு அரசு
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் மத்திய-மாநில அரசுத் துறைகள் இணைந்து செயல்பட்டது பாராட்டுக்குரியது. பருவநிலை மாற்றம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பருவநிலை மாறுபாடால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் இந்தியா 5-ம் இடத்தில் உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications