மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் ரத்து! கடும் எதிர்ப்பால் திடீர் மாற்றம்!
சென்னை: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை சென்னை ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதிலாக இணை அமைச்சர் சுகந்த மஜும்தார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிதி விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சு காரணமாக தமிழ்நாட்டில் அவருக்கு எதிர்ப்பு வலுவாகி வரும் நிலையில் அவரது சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது என்றும், அதனால் தமிழகத்திற்கு கல்விக்கான நிதி வழங்க முடியாது என்றும் கூறியிருந்தார். தமிழகம் மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே ரூ.2152 கோடி கல்வி நிதியை விடுவிப்போம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். மாணவர்கள் நலன் கருதி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால், அரசியல் காரணங்களுக்காக குறுகிய பார்வையுடன் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகவும், கல்வியை அரசியலாக்க வேண்டாம் எனவும் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதினார்.
தற்போது மும்மொழிக் கொள்கை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களில் இறங்கியுள்ளன. திமுக மாணவர் அணி சார்பிலும், மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், நாளை சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அவரது வருகை ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு கல்விக்கான நிதி வழங்க மறுத்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சென்னைக்கு வந்தால் அவருக்கு கடும் எதிர்ப்பு ஏற்படும் என்பதால் தான் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்திற்கு நிதி வழங்க மறுக்கிற ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வரும் பிப்ரவரி 28 அன்று சென்னை வருகிற போது அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications